பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

87



விமானம் ஒன்று விண்வெளியில் பறக்கின்றது. விமான ஓட்டி அணுகுண்டு ஒன்றைக் குதிகுடையில் (Parachute) கட்டுகிறார்; குண்டில் தீயையிட்டு வீசுகின்றார். வீசிய கணத்திலே பல பல மைல் தொலைவு பறந்து விடுகின்றார். கொடிய கோடைக் காலத்து நண்பகல் வெயிலில் கணகன என்று எரியும் கதிரவன் போன்ற ஒளி மட்டுமே மின் வெட்டுப் போலப் பளிச்செனப் பின்னிருந்து எழுகின்றது. முன்னே கண்களைக் கூசி மூடச் செய்கின்றது. ஒரு பெரிய எதிரொளி. விமானம் நில்லாமல் ஓடுகிறது. முப்புரம் எரித்த சிவனார்போல ஒருபுரம் எரித்த ஒருவராகத்தாம் உலக மக்களுக்கு விளங்குவதனை இவர் எப்படி அறிவார்?

மறுநாள் அணுகுண்டு வீழ்ந்த இடம் சென்று "கோபுரம் என்ன நிலையில் உள்ளது?" என்று பார்க்கின்றனர். எஃகுக் கோபுரம் எரிந்து சாம்பலாய்ப் போயிருந்ததைக் கண்டனர். கோபுரத்தின் அறிகுறியே காணப் பெறவில்லை. எஃகு இரும்பு ஆக்ஸைடாகப் போய் விட்டது. மணல் உருகிக் கொதித்து ஒரு மைல் குறுக்களவுள்ள கண்ணாடி ஊத்தப்பம் போலக் காட்சி அளித்தது. ஒரு சில நாட்களில் ஜப்பான் நகரங்கள் அணுகுண்டுகளினால் என்னென்ன வகையால் அழிந்து ஒழியும் என்பதெல்லாம் மெக்சிகோவின் சோதனையால் தெளிவாயிற்று. "உலகத்தின் தலை எழுத்தினை இனி அணுகுண்டு கொண்டு தான் எழுத வேண்டும்” என்பது தெளிவாகப் புலனாகி விட்டது.

ஒரு சில நாட்களில் யுரேனியம் அணுகுண்டு ஒன்று ஹிரோஷிமா நகரத்தின்மீது வீழ்த்தப் பெறுகின்றது. சொற்களால் எடுத்துரைக்க முடியாத அழிவு. உயிருள்ள எல்லாப் பொருளும் நெருப்பில் முறுகிக் கருகி வெந்து ஒழிந்தன; வீட்டின் வெளியே இருந்தவர்கள் உடனே எழுந்த தீயினுக்கு, கண் இமைப்பதன் முன்னரே இரையாகி மாயமாய் மறைந்தனர்; எப்படி மரித்தனர்? என்பது கூட விளங்கவில்லை. எத்தனை பேர் மாண்டனர் என்பது கூடக் கணக்கிட முடியாத நிலை. எலும்பின் சாம்பல் கூட இல்லாமல் ஆவியாகப் போய் விட்டது. சாம்பலாகாது கிடந்தவர்கள் ஆண் பெண் என்று கூட இனங் காண முடியாதபடி சிதைந்து கிடந்தனர். பெரிய பெரிய பல்லடுக்கு மாளிகைகள் - எரிமலையும் தகர்க்க முடியாமல்