பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகப்பேறு மருத்துவம் பற்றி ஒரு மருத்துவர் நம் முன் நின்று பேசுவதுபோல் ஆதியோடு அந்தமாக விளக்கியுள்ளார். இப்பகுதி பயன்பாடு மிகுந்த பகுதி. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் ஆசிரியர் கைதேர்ந்தவர் என்பதை இக்கட்டுரை புலப்படுத்துகிறது. 87 அகவையிலும் கல்லூரி மாணவனுக்குள்ள ஆய்வு வேட்கையுடன் தேடல், புதியன காணல், புதுவது புனைதல். முதலியவற்றில் ஆர்வத்தோடு உழைத்து வரும் இளைஞராகவே இவர் காட்சியளிக்கிறார். நினைவாற்றலில் வல்ல இவர் தம் வாழ்க்கை அனுபவத்தை ஏழு தொகுதிகளில் மலரும் நினைவுகளாகப் பதிவு செய்துள்ளார். பேரறிவும். பேராற்றலும் பெற்ற பேராசிரியரின் பேருழைப்பால் தமிழ் பெற்ற பேறுகள் பல. கற்றல், கற்பித்தலில் தனி ஆற்றல் பெற்ற இவர்கள் தமிழ் பயிற்று முறை, அறிவியல் பயிற்றுமுறை முதலிய நூல்களைக் கற்பித்தல் நெறியில் இயற்றித் தனிச்சிறப்பும் விருதுகளும் பெற்றவர். 'தமிழில் அறிவியல் செல்வம்’ என்னும் இந்நூலை இரண்டு தலைப்புக்களில் 200 பக்க அளவில் மிகச் சிறப்பாக அமைத்துள்ளார். இரு தலைப்புகளையும் சரி சமமாகப் பங்கிட்டுக் கொண்டு ஒவ்வொன்றையும் நூறு பக்க அளவில் மிக நுட்பமான செய்திகளைப் பகுத்தும் தொகுத்தும் சொல்லியுள்ளார். இயற்பியல் நோக்கில் என்னும் தலைப்பில் பஞ்சபூதத்து இயல்பை மிக நுட்பமாக ஆராய்கிறார். கால வரிசைப்படி ஆராய்கிறார். பஞ்சபூதத்து இயற்கை தெளிவோம்’ என்ற பாரதியின் கூற்றுக்கேற்ப ஆசிரியர் வானியல் ஆய்வில் அண்மைக் காலத்தில் நிகழ்ந்த வான்வெளி வளர்ச்சிகளை ஆராய்ந்து தெளிவாக்கி யுள்ளார். அடிப்படை அறிவியல் செய்திகள் தொடங்கி இன்று வான் தொட வளர்ந்த விண்வெளிப் பயணம் பற்றி விரிவாக ஆராய்ந்து விளக்கியுள்ளார். தமிழ்நாட்டின் முதல் பல்கலைக்கழகமாகவும். மூத்த பல்கலைக் கழகமாகவும் திகழும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பெருமைமிகு பேராசிரியர் முனைவர் ச. இன்னாசிமுத்து அவர்கள் தொண்டின் தூயவடிவம். அன்னார் தம்முடைய மிகுந்த பணிகளுக்கிடையே கருத்தாழம் மிக்க மதிப்புரையை அணிந்துரையாக வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. இந்நூலாசிரியரை காரைக்குடியில் கல்விப்பணி தொடங்கிய காலம் தொட்டு கடந்த 50 ஆண்டுகளாக நான் நன்கறிவேன். கற்றல், சிந்தித்தல், தெளிதல் இவற்றில் ஆழ்ந்து இவர் செய்யும் தமிழ்த் தவமே இவர்தம் நூற்கொடை.