பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

199


அரபுத் தமிழில் பாடியிருப்பதோடு இஸ்லாமிய மக்களிடையே காணும் வரதட்சணைக் கொடுமை, கந்தூரியின் பெயரால் நடக்கும் பித்தலாட்டக் குறைகளைச் சுட்டிக்காட்டும் சீர்திருத்தப் போக்கிலான பாடல்களையும் பெருமளவில் அரபுத் தமிழில் எழுதிக் குவித்துள்ளார் என்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.

தமிழ் நாட்டு முஸ்லிம்கள் மட்டுமல்லாது இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம்களும் அரபுத் தமிழ் வளர்ச்சியிலே பெரும் பங்கு கொண்டிருக்கிறார்கள் .

இஸ்லாமிய நெறியுணர்த்தும் இலக்கியப் படைப்புகள் முதல் சிறுவருக்கான சின்னஞ்சிறு உரைநடை நூல்கள்வரை அரபுத் தமிழில் ஆக்கப்படடுள்ளன. சமயம், வரலாறு, தத்துவம், மருத்துவம், கதை என தமிழிலும் அரபியிலும் எத்தனை வகையான துறைகள் உண்டோ அத்தனையிலும் அரபுத் தமிழ்ப் படைப்புகளைச் செய்யுள் உருவிலும் உரைநடையிலும் எழுதியுள்ளார்கள் தமிழ் முஸ்லிம்கள். இன்னும் சொல்லப் போனால் ‘இல்முந்நிசா’ எனும் காமச்சுவை நனி சொட்டக் சொட்டக் கூறும் காமக்கலை நூலும் அரபுத் தமிழில் வடித்துத் தரப்பட்டுள்ளது.

அரபுத் தமிழ் படைப்புகள் அனைத்துமே இஸ்லாமிய நெறி தொடர்புடையனவாக இருந்ததால் அவற்றில் அரபி, பெர்சியச் சொற்கள் மிகுதியும் இடம்பெற்றுள்ளன. இச்சொற்களை ஒலிச் சிதைவு இல்லாதபடி படிப்பதற்கு அரபித் தமிழே வாய்ப்பாக அமைந்தது.

ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட திருமறை விரிவுரைகள் அனைத்தும் அரபுத் தமிழிலேயே எழுதப்பட்டுள்ளன. இஸ்லாமிய சட்ட திட்டங்களும் அரபுத் தமிழிலேயே உருவாக்கப்பட்டன.