பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

இறையருளால் ஆண் மகவு பிறக்க, அதற்கு அப்பாஸ் எனப் பெயரிட்டு அன்போடு வளர்க்கிறான். பதினைந்து வயதாகும்போது அப்பாஸ் இளவரசன் வேட்டைக்குச் செல்கிறான். காடு மேடுகளில் வேட்டைககென அலைந்து திரிந்த அப்பாஸ்-க்குக் களைப்பும் தாகமும் மேவிட, குடிநீர் கிடைக்கா நிலையில் மனம் தடுமாறியவனாக மது நீராகிய கள் குடித்து மயக்கமடைகிறான். இதனையறிந்து மனத்துயருற்ற மன்னன் பெரு முயற்சிகளுக்குப் பின் தன் மகனின் மது மயக்கத்தைத் தெளியச் செய்கிறான். ஆயினும், இஸ்லாத்தால் அறவே கூடாது என ஒதுக்கிய மதுவை மகன் அப்பாஸ் அருந்திய காரணத்திற்குத் தண்டனையாக அப்பாஸைக் காட்டிற்கு அனுப்ப, அரசனாகிய தந்தை முடிவு செய்கிறான். ஆயினும் அருமந்தச் செல்வனை விட்டுப்பிரிய மனமில்லாதவனாக மன்னன் தன் மனைவியொடும் மகனோடும் நாட்டை விட்டுக் காட்டை நோக்கிச் செல்கின்றனர். கானகத்தே அவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். அதன்பின் பகுவீறு எனும் நாட்டை அடைகின்றனர். அந்நாட்டு இளவரசி மெஹர்பான் என்பவள், தான் கேட்கும் நூறு கேள்விகளுகுத் தக்க விடை தருபவரையே திருமணம் செய்வதாகவும், விடை கூற இயலாதவர் தன் உயிரை இழப்பர் என்றும் அறிவித்திருந்தாள். இம்முயற்சியில் சிலர் ஈடுபட்டு உயிரையும் இழந்திருந்தனர். இந்நிலையில் மெஹர் பான் கேள்விகளுக்கு பதில் கூறத் துணிந்து முன் வந்த அப்பாஸ் அவள் விடுத்த நூறு கேள்விகளுக்கும் தக்க விடைகளைக் கூறி வெற்றி பெறுவதாகவும் அதன் மூலம் தான் இழந்த நாட்டை மீண்டும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்ததாகவும் கதை அமைந்துள்ளது.

நூல் வரலாற்றுப் பகுதியின் மன்னன் மகன் அப்பாஸ் அடைந்த இன்னல்களே மிகுதியும் பேசப்படுகின்றன. அவர்கள் பட்ட பாட்டிற்கும் அடைந்த துன்பத்திற்கும் விதியே காரணம் என ஆசிரியர் கூறுகிறார்.