பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

பாட்டுடைத் தலைவியாகிய சைத்தூனை வீரத் திருவுருவாகக் காட்ட முயன்று அதில் வெற்றியும் பெறுகிறார். அவள் போர் புரியும் போது எத்தகைய வீரவுணர்ச்சி பொங்கப் போரிட்டாள் என்பதை சித்திரிக்கும் வகையில், எல்லோருக்கும் புரியும்படியான எளிய உவமான உபமேயங்களின் துணையுடன்,

"கொக்குக் குலத்தில் ராஜாளி போல்
        குதித்தாள் சைத்தூனும்
ஆட்டுக் கும்பலில் புலியைப் போல்
         புகுந்தாள் சைத்துானும்
மலைபோல் வெட்டிக் குவித்தாள் சைத்துான்
         மண்டை மூளை சிதற
தயிரின் குடம்போல் மூளைகள் சிதற
          தலைகள் தானுதிர"

என்றெல்லாம் வர்ணிப்பதின் மூலம் போர்க்களக் காட்சிகளையே நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துவதோடு சைத்தூனின் வீரத்தையும் அழகுறப் புலப்படுத்தி விடுகிறார் நூலாசிரியர்.

சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் கூறிச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் படைக்கப்பட்ட இக்கதை இலக்கியத்தில் இஸ்லாமியச் செய்திகளோ தத்துவ நுட்பங்களோ அதிகம் இடம் பெறவில்லையெனினும் கதைப் போக்கில் ஆங்காங்கே இஸ்லாமிய நெறியின் அடிப்படைத தன்மைகளை ஆனாயாசமாகச் சொல்லி செல்ல ஆசிரியர் தயங்கவில்லை. முஸ்லிமல்லாதவர்களுடன் போரிட நேரிட்டால் முஸ்லிம்கள் முதலில் தங்கள் தாக்குதலைத் தொடுக்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை. எதிரிகள் முதலில் தாக்க அதன் பின்னரே தற்காப்பின் பொருட்டு எதிரியுடன் போரிட வேண்டும் என்பது இஸ்லாத்தின் அடிப்படை நியதியாகும்.