பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சாந்தி வழியைப் பின்பற்றுகின்ற எந்தவொரு முஸ்லிமும் அமைதிச் சூழ்நிலையை உருவாக்கி, மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து வாழவே முனைய வேண்டும் என்பது தீன் நெறியாகும். இதனால் முதலில் விரோதிகளின் தாக்குதலைச் சந்தித்த பின்னரே முஸ்லிம்கள் போரிடுதல் முறை என்பவை தெளிவுறுத்தும் வகையில், ஹனீபு கூறுவதாக,

"எதிரி அடித்தபின் நாங்கள் அடிப்பது
      எங்கள் வழக்கம் என்றார்"

இஃது இஸ்லாத்தின் அடிப்படை அம்சத்தை எடுத்துக் கூறும் வரிகளாகும்.

இவ்வாறு நூலின் இடையிடையே பொருத்தமான இடங்களில் இஸ்லாமியப் பண்பு நெறிகளைக் கூறும் முயற்சியில் நூலாசிரியர் பேட்டை ஆம்பூர் அப்துல் காதிரி சாகிபு அவர்கள் ஓரளவு வெற்றியும் பெறுகிறார்.

சாதாரண வாசகர்களைக் கவர்வதைக் கருத்தாகக் கொண்டு இயற்றப்பட்ட இந்நூல் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இயற்றப்பட்டதென்பது இன்னும் புதிராகவே இருக்கிறது. இதில், இஸ்லாமிய வரலாற்றில மிக்க புகழ்பெற்ற பெரியார்கள் பலரின் பெயர்கள் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டாலும் அவர்களின் வாழ்க்கையின் எநதப் பகுதியாலும் இக்கதை நூலான கிஸ்ஸாவில் விவரிக்கப்படும் நிகழ்ச்சி நிகழ்ந்ததாகக் கூற முடியவில்லை. ஒரு வேளை இந்நூல் கற்பனையாக பாரசீக, அரபி மொழியிலிருந்து தழுவப்பட்டிருககலாம். இல்லையெனின் இஸ்லாமிய வரலாற்றுச் சாயலில் தமிழிலேயே மூலக் கற்பனை நூலாகப் படைக்கப்பட்டிருக்கலாம். எப்படியிருப்பினும் மிகச் சாதாரண மக்களும் கதைப் போக்கில் இஸ்லாமிய ஒளி பெற இந்நூல் தோன்றாத் துணையாக அமைந்துள்ளது என்பதில் ஐயமில்லை.