பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

மின்றி, தவறான வழியில் தான் தோன்றிகளாய் இம்மையில் வாழும் மனிதர்களுக்கு மறுமையில் இறைவனால் எப்படிப்பட்ட தண்டனைகள் வழங்கப்படும் என்பதைச் சுவைபட விவரிக்கும் இலக்கியப் படைப்பே 'இருஷாது நாமா.' இறையுணர்வை மறநது இவ்வுலக வாழ்வில் மூழ்கி பொருள், புகழ் வயப்பட்டு வாழும் மனிதர்களுள் வெவ்வேறு வகைப்பட்ட ஏழு பகுதியினர் இறைச் சந்நிதானத்தை எட்டும்போது எத்தகைய கேள்வி கணக்குகட்கு ஆட்பட்டு இறுதியில் எவ்வகையான கொடுந்தண்டனை பெறுவர் என்பதை இலக்கியச் சுவையுடன் இந்நூல் விவரிக்கிறது.

முதலாவதாக அறிஞர் குழுவொன்று இறைச்சந்நி தானத்தில் வந்து நிற்கும். அவ்வணியின் தலைவராக வந்த அறிஞரை நோக்கி, இறைவணக்கப் புரிவதற்கென்றே உன்னையும், உனக்கு வேண்டிய அறிவையும் தெளிவான சிந்தனையையும் தந்திருந்தும் இவ்வுலக வாழ்வில் என்னை மறந்து. உன்னையே எண்ணி வாழ்ந்ததன் காரணம் என்னவென வினவ, அதற்கு மறுமொழியாக, தான் கற்ற நூலறிவையும் பெற்ற பட்டறிவையும் கொண்டு மக்கட்டு அறிவுரை வழங்குவதிலேயே நாட்டமுடன் வாழ்ந்து விட்ட காரணத்தால் இறை வணக்கம் புரியத் தவறி விட்டதாகக் கூற, இறைவனின விருப்பத்துக்கு மாறாக வாழ்ந்த அவ்வறிஞனை கொடுநரகில் அல்லாஹ் தள்ளுவான் என்பதை,

"அப்போது இறையவன் சொல்லிடுவான்
     அறிநத படிநீங்கள் செய்தீரில்லை
செப்ப முடன்பணம் செல்வத்துக்காய்ச்
    செல்லும் சுதந்திரம் பெருமைக்காக
மெப்பாய் மனிதர்கள் போற்றவென்று
     மொழிந்தீர் அறிவுகள் பலபேருக்கும்
தப்பாய் நடந்திட்டீர் என்று சொல்லித்
      தரிக்க நரகத்தில் விடுவானென்றார்".