பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

113


பெயர் வானம்பாடி’ என்று தொடங்கி அத் தலையங்கத்தின் சில பகுதிகள் இவை-

“சமுதாய அவலங்களின் மீது எங்கள் தார்மீகக் கோபத்தின் அனல் படரும் காரணத்தால்- அண்மைக் காலத்தில், பல ஏடுகளில் அறிந்தோ அறியாமலோ அல்லது வேண்டுமென்றோ எங்கள் படைப்பாளிகளை கட்சிக்காரர்கள் என்று முத்திரை குத்தவும், முகத்திரை போடவும் சில சக்திகள் கங்கணம் கட்டியுள்ளன.

'வானம்பாடி இயக்கம்' பற்றி அரசியல் ரீதியான மதிப்பீடுகளும் பத்திரிகைகளில் இடம் பெற்று வந்துள்ளன. எங்களில் சிலரை இன்ன கட்சிக்காரர் என்று மீண்டும் மீண்டும் அழுத்தமாக முத்திரை குத்தி வருவதைப் பொறுத்துக் கொண்டிருப்பது சரியல்ல என்பதால் நாங்கள் மெளனம் கலைக்கிறோம்.

நேரடியாகவோ மறைமுகமாகவோ இயங்கி வருகிற எந்த அரசியல் கட்சிகளுடனும்-அந்தரங்கமாகவோ பகிரங்கமாகவோ அரசியல் ரீதியான தொடர்பு எங்களுக்குக் கிடையாது. இதனை மிக வன்மையாகவும் உறுதியாகவும் உரத்த குரலில் அறிவிக்க விழைகின்றோம்.

அப்படியானால் நாங்கள் யார் ?

மனித சமுதாயத்தின் துக்கங்கள்- துயரங்கள் இங்கேயானாலும் எங்கேயானாலும் உறவும் சொந்தமும் கொண்டாடி அவைகளில் பங்கு கொண்டு அவைகளை வேரோடு சாய்க்க எழும் வெண்கல நாதங்கள் நாங்கள்.

மனிதாபிமானம், முற்போக்கு, உழைப்பின் பெருமிதம், விஞ்ஞானம் இவற்றைக் கவிதைக் கலையில் உயிர் வனப்போடு அள்ளிப் பொழியும் வித்தக விரல்கள் எங்களுடையவை. மொழி, இனம், சாதி, சமய, நிறக் கொடுமைகள்- பிளவுகள்- பேதங்களைத் தரைப் புழுதியாய் மிதித்து நசுக்கும் ஆவேசம் எங்கள் மூலதனம்.

நவநவமான உத்திகளில் புதுப்புதிதான உருவ வார்ப்புக்களில் சமூகத்தில் நசுக்கப்பட்டவர்களின் நியாயங்களை உள்ளடக்கமாகப் புனையும் இலக்கியவாதிகள் நாங்கள்.”

மேலும் தங்களைப் பற்றியும், தங்களுடைய கவிதைக் கண்ணோட்டம்,