பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



21. சுவடு


சிறு பத்திரிகைகள், தனி நபர்களால் தொடங்கி நடத்தப்பட்டாலும், அல்லது இலக்கிய ஆர்வமுள்ள சிலரால்-ஒரு குழுவால்-நடத்தப்பட்டாலும், காலப்போக்கில் குறைபாடுகளை உடையதாக மாறிவிடுவதே இயல்பாக இருந்து வருகிறது. தனிநபரின் விருப்பு வெறுப்புகள் அல்லது குழுவினரின் கோஷ்டி மனோபாவம் அவரவர் பத்திரிகையின் நோக்கிலும் போக்கிலும் வெகுவாகப் பிரதிபலிக்கவே செய்யும். அப்படி ஆகிற போது பொதுவான இலக்கிய சிரத்தை பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகிறது.

இந்தக் குறைபாடு இல்லாமல், பொதுவான இலக்கிய ஏடு-தரமுள்ள சிறு பத்திரிகை ஒன்றை நடத்த வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் புதுக்கோட்டை இளைஞர்கள் சிலருக்கு ஏற்பட்டது. அவர்கள் ‘சுவடு' என்ற பெயரில் ஒரு சிற்றேடு ஆரம்பித்தார்கள்.

'சுவடு' முதலாவது இதழ் 14-4-1978-ல் வெளிவந்தது.

முதல் இதழில் 'பயணம்' என்ற தலைப்பில் அவர்களது நோக்கம் தெளிவாக அறிவிக்கப்பட்டது

“இலக்கிய வெளியில் வலது கால் பதிக்கும் இந்த நேரத்தில் கவடு உங்களுடன் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் பகிர்ந்து கொள்கிறது.

இது இலக்கியச் சிற்றேடுகளின் காலம். வாழ்ந்து மறைந்த ஏடுகளையும் இன்று வந்து கொண்டிருக்கும் சிற்றேடுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டே இந்த ஏடும் துவங்குகிறது. இன்றைய இலக்கியச் சூழலில் இலக்கியவாதிகள் தனி மரங்களாகவும் குழுக்களாகவும் பிரிந்து செயற்படுவதால் இலக்கியச் சிற்றேடுகள் உள் வட்டத்தில் சிறு வட்டம் அமைத்து நிற்கின்றன. எல்லாத் தரப்பினருக்கும் பொது மேடையாக அமைய சுவடு ஆசைப்படுகிறது.

உடன் நடக்கும் பாதங்கள் எவை எவை என்று நாங்கள் நிர்ணயிக்கவில்லை. காலத்தை அழுக்காக்காத கால்கள் உங்களுடையதென்றால்