பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

வல்லிக்கண்ணன்


கருத்துக்களை எதிர்கொள்ள, அறையை விட்டு வெளியே வந்து கருத்துக்களைச் சொல்ல இவர்களுக்கு அறிவார்ந்த தைரியம் இல்லை. தங்கள் பொச்செரிப்பை முணுமுணுத்துக் கொள்கிறார்கள்.

எங்களுக்குத் தெரியும், யாத்ரா பத்திரிகையில் நாங்கள் முன் வைக்கும் எண்ணற்ற கருத்துக்கள் இச்சூழலின் அஸ்திவாரத்தையே அதிர வைக்கும் சச்சரவு குணம் கொண்டவை. பெரிய கருத்துப் போர், புயல் வீசியிருக்க வேண்டும். ஆனால் நிகழ்வது எருமை மாட்டின் மீது பெய்த மழைக் கதைதான். வாய் திறப்பவர்களோ, தங்கள் கட்சிக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள கருத்துக்களை எதிர்கொள்ளாமலேயே, தம் பார்வையினால் அக்கருத்துக்களைச் சாடி வீழ்த்த முடியாமலேயே, கிளிப்பிள்ளை மாதிரி தாம் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வதையே செய்கிறார்கள். இதை என்னென்பது அறிவுலகில் தடுக்கி வீழ்ந்துவிட்ட மரத்தனம் எனலாமா ?' (இதழ்-13)

'யாத்ரா' என்னென்ன செய்யவேண்டும் என்று கருதுகிறது என்பதை விளக்கி 6-ம் இதழில், ஆசை நிறைந்த திட்டம் ஒன்றை வெளியிட்டது. பாராட்டப்பட வேண்டிய அத்திட்டத்தைக் கூடியவரை செயல்படுத்தவும் முயன்றது.

இலக்கியப் பத்திரிகை செய்யவேண்டிய—ஆனால் செய்யத் தவறுகிற—முக்கிய காரியம் ஒன்றை 'யாத்ரா' சிறிது காலம் செய்தது. வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டிய சில புத்தகங்கள் பற்றி விரிவான கட்டுரைகள் எழுதியுள்ளது. பாலாவின் 'சர்ரியலிஸம்', எஸ். வி. ராஜதுரையின் 'அந்நியமாதல்', க. நா.சு. தொகுத்த 'தமிழ்ச் சிறுகதைகள்' பற்றி விசேஷக் கட்டுரைகளை அது பிரசுரித்தது.

பல புத்தகங்களைப் பற்றியும் அபிப்பிராயங்கள் தெரிவிப்பதற்காக 'பார்வைகள்' என்ற பகுதியை ஆரம்பித்து. பல பக்கங்களை ஒதுக்கியது. ‘அபிப்பிராயங்களை அபிப்பிராயங்களாகவே சந்திக்க வேண்டும். சுதந்திரமான, மயக்கங்களுக்கும் பீதிக்கும் இரையாகாத, ஆரோக்கியமான கருத்துப் பரிவர்த்தனை—யார் சொன்னது என்ற அரிப்புக்கு ஆளாகாத, என்ன சொல்லப்பட்டுள்ளது என்றே அறியமுயலும், பின் அக்கருத்துக்களைச் சந்திக்க முயலும் பழக்கம்— இவை வேண்டும்' என்று, பார்வைகள் பகுதி தொடங்கிய போது (15-ம் இதழில் ) யாத்ரா அறிவித்தது. இந்தப் பகுதி நாலைந்து இதழ்களுக்குப் பிறகு தொடரவில்லை.

தமிழ்நாடு சரிவரத் தெரிந்து கொள்ளாத படைப்பாளிகள்,