பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

179


ஆய்வாளர்களையும், அவர்களது சாதனைகளையும் 'யாத்ரா' வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவரப் பெரிதும் பாடுபட்டது. பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை பற்றிய சிறப்புக் கட்டுரை, ப. வ. இராமசாமி ராஜு என்ற நாடகாசிரியர் பற்றியும், அவரது பிரதாயசந்திர விலாசம் நாடகம் பற்றியும் அறிமுகக் கட்டுரைகள், 'ஆண்டி' என்ற புனைபெயரில் நாடகங்களும், நாடகக் கலை பற்றிய ஆய்வுரைகளும் எழுதிய வி. ராமசுப்பிரமணியம் பற்றிய சிறப்பிதழ் (31-32-33) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

'புதுமைப்பித்தன் கதைகளில் காலத்தின் கலைவண்ணம்' (கந்தர ராமசாமி), மௌனி— மௌன உலகின் வெளிப்பாடு (வெங்கட்சாமிநாதன்) ஆகிய கட்டுரைகளும் முக்கியமானவை.

ந. முத்துசாமி, செ. ரவீந்திரன், ஜெயராமன், ஆர். ரவீந்திரன் முதலியோர் 'யாத்ரா' வில் அதிகம் எழுதினார்கள்.

தெருக்கூத்து, கணியான் ஆட்டம், தோற்பாவைக்கூத்து, மெலட்டுர் பாகவத மேளாநாட்டிய நாடகம் பற்றிப் பயனுள்ள, ஆதாரபூர்வமான கட்டுரைகள் பிரசுரமாகியிருக்கின்றன. 'கணியான் ஆட்டம்' பற்றி எழுதிய அ. கா. பெருமாள் 'நாட்டுப்புற வழிபாடுகள் நம்பிக்கைகள்' சம்பந்தமான ஆய்வாக இயக்கி அம்மன் பற்றி விரிவான கட்டுரை எழுதினார். ஒரு இதழ் (மார்ச்-ஏப்ரல் 1980 ) தெருக்கூத்து சிறப்பிதழ் ஆக வெளிவந்தது.

இவ்வாறு புராதனக் கலைகள், வாழ்க்கை முறைகள் பற்றிய ஆய்வுகளில் அக்கறை காட்டிய 'யாத்ரா', நவீன நாடகத்திலும் கருத்து செலுத்தியது. ந. முத்துசாமியின் நாடகங்கள் பற்றிய அபிப்பிராயங்களையும், முத்துசாமியின் புதிய நாடகங்களையும் பிரகரித்தது.

தி. ஜானகிராமன் நினைவு இதழாக, பல நல்ல கட்டுரைகளைத் தொகுத்து அளித்தது.

இதர சிறு பத்திரிகைகளின் முக்கியமான—ரசிகர்கள் கவனித்துப் படிப்பதற்கு ஏற்ற—கட்டுரைகள், ஆய்வுகள் வெளிவந்தால், அவற்றை எடுத்துச் சொல்வதற்காக 'யாத்ராவின் சிபாரிசு' என்றொரு பகுதியை அது வளர்த்தது.

30-ம் இதழில் 'பதிவுகள்' என்ற பகுதியை அது அறிமுகப்படுத்தியது. 'இதில் பலரும் பங்குகொள்ள' வேண்டும் என்பது எங்கள் விருப்பம். சக யாத்ரீகர்கள் அனைவரும் பங்கு கொண்டு தங்கள் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ள இந்தப் பகுதி பயன்படும். எந்த