பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

வல்லிக்கண்ணன்


சார்ந்த பகுத்தறிவுவாதிகளும் மேற்கண்ட தெய்வீக (!) செயல்களை, கடவுள் இல்லை என்று முழக்கிக் கொண்டே செய்து காட்டி வெகு ஜனங்களிடையே நாத்திகப் பிரசாரத்தில் வெற்றி கண்டு வருகின்றனர். ஆவி, மறுஉலகு, பூர்வ ஜன்மம் போன்ற கட்டுக்கதைகளையும் இவர்கள் பொய்யாக்கி வருகிறார்கள் என்று அறிமுகமும், மற்றும் சுவையான தகவல்களும் தரப்பட்டன.

சீனாவின் தலைவர் மாவோ எழுதிய கவிதைகள், விஞ்ஞானி பாவ்லோவ் பற்றிய கட்டுரை, சோவியத் ரஷ்யாவின் போக்கைக் குறை கூறும் விஷயங்கள், அமெரிக்காவின் செயல்களைக் கண்டிக்கும் கட்டுரைகள் விடியலில் பிரசுரமாயின.

விடியல் டாக்டர் கோவூரை ஆதரித்துக் கட்டுரையும் செய்தியும் வெளியிட்டதை எதிர்த்தும் பாராட்டியும் கடிதங்கள் நிறைய வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல கடிதங்கள் வெளியிடப்பட்டன.

அடுத்து, ‘செக்ஸிலிருந்து மார்க்ஸியம் நோக்கி...‘ (வெண்மணி ராஜன் எழுதியது ) என்ற கதை ஒன்று வெளிவந்தது. அதுவும் சூடான விமர்சனங்களைக் கிளப்பி விட்டது.

விடியலின் 25 வது இதழ் (25-7-76) முக்கியமானது. அதில் விரிவான சுய விமர்சனம் ஒன்றை அது வெளியிட்டது.

அதன் சில பகுதிகள் பின்வருமாறு :

‘பொதுவாக விடியல் இதழ்கள் நெடுக ஏகாதிபத்திய எதிர்ப்புக் கட்டுரைகள்தான் இடம் பெற்றிருக்கின்றன. விடியல் தனக்குப் பிரதான எதிரியாக வரித்துக் கொண்டிருக்கிற நிலப்பிரபுத்துவத்தைக் கருவறுப்பதற்கு சொற்ப முயற்சியே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. நிலப்பிரபுத்துவத்தை மூர்க்கத்தனமாக எதிர்க்கும் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவை வெளியாவதற்கான வாய்ப்புக்களை அகலப்படுத்தியிருக்க வேண்டும்.

விடியலில் மிக அழுத்தமாகப் பதிந்துவிட்ட மூன்று குறைகள்... அவசியமாகக் குறிப்பிட வேண்டிய அவசியத்தைத் தந்திருக்கின்றன.

17 வது இதழில் வெளியான மாட்டு வண்டிகள் என்ற கட்டுரை.

2.10 வது இதழில் வெளியான கோவூரைப் பற்றிய பாராட்டுரை. மற்றும் அவற்றைத் தொடர்ந்து 19, 20 இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட ‘கோவூர் பொருள்முதல் வாதியா?‘ என்ற கடிதத் தொடர்.