பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42. பரிமாணம்


தமிழ்நாட்டில் 'மார்க்சிஸ்டுகள்' என்று சொல்லிக் கொள்கிறவர்களுக்கு மார்க்ஸிசம் சரியாகவே தெரியாது; மார்க்ஸிய தத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்ளவேயில்லை என்று குறை கூறுகிற சிந்தனையாளர்கள் பலர் இருக்கிறார்கள்.

மார்க்ஸிஸ்டுகள் என்று கூறிக்கொண்டு சோவியத் ரஷ்யாவை முழுமையாக ஆதரிக்கிற இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்தவர்களும், சோவியத் ரஷ்யாவின் போக்கை விமர்சித்தும் குறைகூறியும் சீனாவின் போக்கை ஆதரிக்கும் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியினரும், உண்மையில் சரியான மார்க்ஸிஸ்டுகள் அல்லர் என்பது இந்த அறிவாளிகளின் அபிப்பிராயம் ஆகும்.

இவர்கள் மார்க்லியத் தேடலில் தொடர்ந்து ஈடுபடுகிறவர்கள். இவர்கள் 'New Lefts' என்று அறியப்படுகிறார்கள். இந்தவிதச் சிந்தனையாளர்களின் கட்டுரைகளும்— இவர்களது சிந்தனை வளர்ச்சிக்குத் துணைபுரிகிற அமெரிக்க, ஐரோப்பிய சிந்தனையாளர்களின் கட்டுரைகளது மொழிபெயர்ப்புகளும்— படிகள், இலக்கிய வெளிவட்டம் போன்ற பத்திரிகைகளில் இடம் பெற்றுள்ளன. இந்த ரீதியான சிந்தனைகள், இலக்கிய விமர்சனங்களுக்கென்றே தனிப் பத்திரிகைகள் நடப்பதும் உண்டு.

கோயம்புத்தூரில் தோன்றிய 'பரிமாணம்' அப்படிப்பட்ட ஒரு பத்திரிகை ஆகும்.

“கலை இலக்கியத் துறையில் மார்க்ஸியம் ஆற்றல் மிக்க கோட்பாடாக இடம் பெற்றுள்ளது. கலை இலக்கியப் படைப்புகளின் வரலாற்றுப் பின்னணியை விளக்குவதில் மார்க்லியத்தின் சாதனை வியப்புக்குரியதாகி இருக்கிறது. ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியில் கலை இலக்கியத்தின் பணியைச் சுட்டுவதில் மார்க்ஸியம் சரியான திசை வழியைக் காட்டுகிறது.

கலை இலக்கியவாதிகளின் ஆளுமைக்குள் வரலாறும் சமூகமும் இயங்குவதை மார்க்லியம் எடுத்து விளக்கும்போது, அத்தகைய தன்னறிவு பெற்ற படைப்பாளிக்குள் விசுவரூப தரிசனம் வாய்க்கிறது.