பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

வல்லிக்கண்ணன்


அமைப்புகளில் ஒன்று. அது 'துளிகள்' என்ற பத்திரிகையை 1981—ல் ஆரம்பித்துச் சில வருடங்கள் நடத்தியது.

‘சமுதாய மாற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கத்தோடு பொதுமை நலக் கோட்பாட்டில் மக்களை ஒன்றுபடுத்துதல், நாட்டுப்புற மேம்பாட்டை மையமாகக் கொண்டு புதிய, எளிய, இலக்கிய வடிவங்களை மக்களுக்குத் தருதல், சிற்றூர் மக்களை அறவே எட்டாத மொழிக் கலவையை விலக்கி எளிய இலக்கிய வழியாக்கல்—இவற்றை நோக்கமாகக் கொண்டு இலக்கிய இயக்கம் பணிபுரிந்தது.

பயனுள்ள சிந்தனைகளைத் தூண்டும் நல்ல எழுத்துக்களோடு ‘துளிகள்‘ வெளிவந்தது. அதன் அமைப்பும் நன்றாக இருந்தது.

கோவை நகரில் இலக்கிய, சமுதாய இளைஞர் அமைப்பான இளைய கரங்கள், ‘இளையகரங்கள்‘ என்ற பத்திரிகையை நல்ல முறையில் சில காலம் பிரசுரித்தது.

‘தனக்குத் தானே அன்னியமாகிப் போய் தனக்கென ஓர் உலகைத் தேடி வெறுமையில் வாடும் இளைய நெஞ்சங்களே !

உங்கள் சோகங்களைப் பகிர்ந்து நம்பிக்கையுடனும் நல்ல நட்புடனும் புதுவுலகில் சஞ்சரிக்க இதோ ஓர் இதழ்! தோள் கொடுக்க வாருங்கள், தோழர்களாய்ச் சேருங்கள்.

உங்கள் உலகம் உங்களை வரவேற்கிறது !‘ என்று இளைஞர்களை ஒன்று சேர்க்க இது முயன்றது.

வழக்கமான பல அம்சங்களோடு, சமுதாயவியல், சட்டவியல், மருத்துவம் போன்றவைகளிலும் இளையகரங்கள் கட்டுரைகள் பிரசுரித்தது. இயக்கச் செய்திகளையும் வெளியிட்டு வந்தது.

கடலூர் ‘இலக்கியச் சிந்தனை‘ என்ற இளைஞர்கள் அமைப்பு ‘கோடுகள்‘ எனும் இதழை 1983-ல் வெளியிட்டது. ஆரம்ப எழுத்தாளர்களின் ஆர்வ முயற்சியாகவே இது அமைந்திருந்தது.

மதுரை மாவட்டம், த. ஆண்டிப்பட்டி, இளைஞர் மற்றும் சமுதாய வளர்ச்சி நிறுவனம் ‘விழி‘ என்ற இதழை வெளியிடுகிறது. சமூக சிந்தனை தழுவிய படைப்புகளுக்கு முக்கியத்துவம் தருகிறது ‘விழி‘.