பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

வல்லிக்கண்ணன்


வேண்டியதில்லை. கலை இலக்கியங்களை அரசியலின்—அது போலவே பிற தேவைகளுக்கு அடிமைப்படுத்தும் போக்கு தமிழகச் சூழலில் தீவிரப் பட்டிருக்கிறது. இதனால் கலை இலக்கியம் பற்றிய பார்வையும் அனுபவமும் சீர்குலைவதோடு, இறுதியில் அரசியல், கலாச்சாரம் பற்றிய பார்வையும் சீர்குலையும். அரசியல்வாதிகளோ, கலை இலக்கியவாதிகளோ இந்த ஆபத்து பற்றி அதிகம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

அரசியல்வாதிகளுக்குக் கலை வெறும் சாதனம். தாங்களே கலை இலக்கியவாதிகள் என்று பெருமிதம் கொள்ளும் சில படைப்பாளிகளுக்கு, கலை இலக்கியமே கதிமோட்சம். இந்த இரு எல்லைகளில் பயணம் செய்வது, சிற்சில சந்தர்ப்பங்களுக்குத் தேவையாக இருந்தாலும், இந்தத் தீவிர எதிர் நிலைகளின் உண்மை முழுமையாக அகப்படுவதில்லை. ஒரு எதிர்நிலை தீவிரம் கொள்ளும்போது, அப்போக்கே அதன் எதிர் நிலையைத் தோற்றுவிக்கிறது என்பதைக் கவனத்தில் கொண்டால் இது புரியும்.

இன்றைய உலக, இந்திய, தமிழகச் சூழலில் முக்கியத்துவம் பெற்று வரும் ஒரு பிரச்னை, சூழலியல் பற்றியது. இதைப் போலவே சரியான ‘விஞ்ஞானக் கண்ணோட்டம் எது’ என்பது பற்றியும், ’பெண் விடுதலை’ என்ற தீவிரமான பிரச்னையும் பல பரிமாணங்களில் ஆராயப்பட வேண்டியவை. இவை பற்றி அரசியல்வாதிகளுக்கும், அதுபோலவே கலை இலக்கியவாதிகளுக்கும் கவலை இல்லை. அரசியலும் கலை இலக்கியமும் சந்திக்கும் ஒரு ஆதார தளத்திலிருந்து மேற்குறித்த பிரச்னைகள் எழுகின்றன. இவை பற்றி நிகழ் சில கட்டுரைகளை வெளியிட முயற்சி செய்கிறது.

நிகழ் தமிழில் வெளிவரும் மிகச் சிறிய இதழ். சிறியதாயினும் மேற்குறித்தவற்றில் அக்கறை கொள்கிறது’ என்று அது அறிவித் துள்ளது.

புதிய தலைமுறை என்ற பெயரில், 1970 களில் கோவையிலிருந்து ஒரு இலக்கிய இதழ் வெளிவந்தது. அது புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தது. தரமான படைப்புகளை வெளியிட்டது. ஞானி போன்றவர்களின் சிந்தனைகள் அதில் பிரசுரமாயின என்று வண்ணநிலவன் தகவல் தருகிறார். இப்போது ’புதிய தலைமுறை’யின் இதழ் ஒன்றுகூட என் பார்வைக்குக் கிடைக்காததால், அதுபற்றிய விரிவான குறிப்புகளைத் தர இயலவில்லை.