பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

273


அப்படிப்பட்டவைகளில் ’சோலைக் குயில்கள்’ என்ற மாத வெளியீடும் ஒன்று ஆகும். இது திருச்சியிலிருந்து வருகிறது.

திருச்சியில், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று கூடுகிறார்கள். கவிதை பற்றிய விமர்சனங்களை வரவேற்கிறார்கள். தங்களைச் 'சோலைக் குயில்கள்' என்று கூறிக் கொள்கிறார்கள்.

மாதம்தோறும் கவி அரங்கத்தில் படிக்கப்பட்ட கவிதைகளில் தேர்ந்தெடுத்த சிலவற்றைச் ’சோலைக் குயில்கள்’ என்ற சிறு இதழாக (10 பக்கங்கள் ) அச்சடித்து வெளியிடுகிறார்கள். நான்கு வருடங்களாக இது நடைபெற்று வருகிறது.

சமுதாயப் பார்வை கொண்ட கவிதைகளே மிகுதி. இரண்டாம் ஆண்டின் முடிவில் ’சோலைக் குயில்கள்’ பெரிய அளவில் ஒரு மலர் தயாரித்து வெளியிட்டது. தரமான கட்டுரைகளும் கவிதைகளும் அதில் இடம் பெற்றிருந்தன.

தஞ்சை மாவட்டம் குத்தாலம் என்ற இடத்தில் உள்ள இலக்கிய அன்பர்கள் ’கேமரா'’ என்ற பெயரில் ’சைக்ளோஸ்டைல்’ பத்திரிகை ஒன்றை நடத்தினார்கள். அந்தப் பத்திரிகைக்கு முக்கியப் பொறுப்பேற்றிருந்த கேசவன், மனோகரன், ராஜசேகர் ஆகியோரது பெயர்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு கேமரா என்ற பெயர் உருவாக்கப்பட்டது.

கதை, கட்டுரை, கவிதைகளோடு இலக்கிய விமர்சனங்களும் கேமராவில் பிரசுரமாயின. ’மணிக்கொடி காலம்’, ’சரஸ்வதி காலம்’ நூல்களிலிருந்து சேகரம் செய்த தகவல்களையும் அது வெளியிட்டது. அது நீண்ட காலம் பிரசுரம் பெறவில்லை.

முகம்— சென்னை, கருணாநிதி நகர் இலக்கிய வட்டம் அன்பர்கள் மாதம்தோறும் கூடி இலக்கிய சர்ச்சை செய்கிறார்கள். சிறப்புச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்கிறார்கள். அத்துடன் ’முகம்’ என்றொரு மாத இதழையும் வெளியிடுகிறார்கள்.

நான்கு ஆண்டுகளாக நடைபெறும் ’முகம்’ மாமணி என்ற இலக்கிய ரசிகர்—எழுத்தாளரின் உற்சாகமும் ஊக்கமும் நிறைந்த உழைப்பின் விளைவால், தரமான இதழாகப் பிரசுரம் பெறுகிறது. எண்ணதாசன்