பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

வல்லிக்கண்ணன்


என்ற பெயரில் அவர் கவிதைகள் எழுதுகிறார். கிந்தனார் பதில்கள் என்ற சுவாரஸ்யமான கேள்வி-பதில் பகுதி இந்தச் சிற்றேட்டின் சிறப்பு அம்சமாக விளங்குகிறது. மாமணி எழுதும் கதைகள், வெங்கடேசன் எழுதும் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள், பேட்டிக் கட்டுரைகள், கவிதைகள் ‘முகம்‘ பத்திரிகைக்கு உயிரூட்டுகின்றன.

கேரளத் தமிழ் : திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் ‘கேரளத் தமிழ்’ என்ற சிறு பத்திரிகையைப் பிரசுரித்து வருகிறது. பிரபல எழுத்தாளர் ஆ. மாதவன் இதன் ஆசிரியப் பொறுப்பை வகிக்கிறார். முக்கியமாக சங்கத்தின் நிகழ்ச்சிகள், அறிக்கைகள், திருவனந்தபுரம் செய்திகளைப் பிரகரிக்கும் இந்த இதழில் இலக்கியம் சம்பந்தமான கட்டுரைகளும் அவ்வப்போது இடம் பெறும் ‘கேரளத் தமிழ்‘ ஆண்டு மலர் இலக்கிய ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். அதன் ஒரு மலர் எழுத்தாளர் தி. ஜானகிராமன் நினைவில் ‘சிறுகதைச் சிறப்புமலர்’ என்று தயாரிக்கப்பட்டிருந்தது. அதில் அருமையான சிறுகதைகள் பல இடம் பெற்றிருந்தன.

அரும்பு என்ற மாதப் பத்திரிகையை விசேஷமாகக் குறிப்பிட வேண்டும். -

பல வருடங்களாக, ஒரு கிறிஸ்துவ சங்கப் பத்திரிகையாக வெளிவருகிறது ‘அரும்பு‘ 1983 ஜூன் முதல் இலக்கியத் தரமான இதழாக மலரத் தொடங்கியது.

1985 ஏப்ரல்-மே இதழில் அதன் சாதனைகள் குறித்து ‘அரும்பு‘ மகிழ்ச்சியோடும் பெருமையோடும் குறிப்பிட்டுள்ளது !

‘இலக்கியத் தரமான விஷயங்களை வெளியிட்டு தமிழ் இலக்கியத் துறையைப் புதிய பரிமாணங்களுடன் முன்னெடுத்துப் போகப் போகின்றோம் என்ற பிரகடனத்துடன் தொடங்கி சில இதழ்களைக் கனமாயும் தரமாயும் வெளியிட்ட பின் வியாபாரச் சந்தையிலே சமரசம் செய்து நீர்த்துப் போயும், இலக்கியக் குமுதங்களாயும் ஆகிவிட்ட சஞ்சிகைகளின் நடுவே, கடந்த இரண்டாண்டுக் காலமாகத் தீர்மானமான இலக்கியக் கருத்துடனும் பிடிவாதத்துடனும் இயங்கி வந்தது அரும்பு‘

இதற்கு அமிர்தராஜ் என்ற எழுத்தாளரின் உற்சாகமான உழைப்பும், இலக்கியவாதிகளுடன் நட்பு உணர்வோடு அவர் கொண்ட தொடர்புகளும் முக்கிய காரணம் ஆகும்.