பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

303


வாசகர்களாக, விமர்சகர்களாக, படைப்பாளிகளாகச் சங்கோஜத்தோடும் சில சமயங்களில் துணிவோடும் நிற்கிற இந்தப் புதிய கர்த்தாக்களுக்குத் ‘தீர்த்தக்கரை’யின் தாய்மை ஆதர்சமாக விளையும்”

இவ்விதம் அதன் மூன்றாவது இதழ் தலையங்கம் பேசியது.

தீர்த்தக்கரை சமூகப் பிரச்னைகளிலும் அக்கறை காட்டியது. ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கையையும் பிரச்னைகளையும் பிரதிபலிக்கும் படைப்பாளிகளின் எழுத்துக்களைத் தமிழாக்கி அறிமுகம் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தது. கேள்வி பதில் பகுதியும் உண்டு.

குருக்ஷேத்திரம் என்ற பகுதி ஒவ்வொரு இதழிலும் வந்தது. இலக்கிய விமர்சனங்கள், எழுத்தாளர் பிரச்னைகள் முதலியன இதில் இடம் பெற்றன. பலபேர் தங்கள் அபிப்பிராயங்களை வெளிப்படையாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

தீர்த்தக்கரை ஆசிரியர் சாந்திகுமார் மலையகம் பற்றி ஆய்வு ரீதியான கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘தீர்த்தக்கரை’ பாராட்டப்பட வேண்டிய நல்ல முயற்சி. ஐந்து இதழ்களோடு அது நின்று போனது ஒரு இழப்புதான்.