பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

வல்லிக்கண்ணன்


கார்க்கியும் தாகூரும் பாரதியும் பிரேம்சந்தும் சிறந்த குறிக்கோளுக்காகவும் உயர்ந்த பண்பாட்டுக்காகவும் பணியாற்றினார்கள். இலட்சிய நாட்டம், ஜனநாயகம், மனிதநேயம் என்னும் பண்பாடுகளை வளர்க்கும் சிறந்த மரபை உருவாக்கித் தந்துள்ளார்கள். இந்த மரபினை உங்கள் நூலகம் வளர்த்துச் செல்லும்' என்று அறிவித்த அவ் ஏடு தனது நோக்குகளையும் அச்சிட்டது.

அவை யாவன—

1. வாழும் சோஷலிச உலகத்தின் சாதனைகளை எடுத்தியம்பும் அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம், விஞ்ஞானம் பற்றிய நூல்களை அறிமுகம் செய்தல், ஆய்தல்.

2. நியூ செஞ்சுரி நூல் வெளியீட்டக நூல்களையும் இந்திய நாட்டின் பல்வேறு பதிப்பகங்கள் வெளியிடும் நூல்களையும் அறிமுகம் செய்தல், சிறந்தவற்றைத் தக்காரைத் கொண்டு திறனாய்வு செய்தல்.

3. கலைஞர்கள், கவிஞர்கள், சிறுகதை எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள், திறனாய்வாளர்கள் ஆகியோரை நேர் கண்டு உரையாடல், அவர்தம் நூல்களை அறிமுகம் செய்தல் ஆய்தல்.

4. வளரிளம் கலைஞர்களையும் படைப்பாளர்களையும் அறிமுகம் செய்தல், ஊக்குவித்தல்.

5. இலக்கியக் குறிப்புகள், விமர்சனக் குறிப்புகள், கட்டுரைகள் ஆகியவற்றைத் தக்காரையும் வல்லுநரையும் கொண்டு எழுத வைத்தல்.

6. நூலாய்வாளர்கள் திறனாய்வு நோக்குப் பெறவும், சொந்தமாக வீடுகளில் நூல் நிலையம் அமைக்கவும் உதவுதல்.

இதற்கேற்ப புத்தக உலகம் சம்பந்தமான தகவல்கள், கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் முதலியவற்றை ’உங்கள் நூலகம்’ வெளியிட்டு வருகிறது.

ஆர்வத்தின், உற்சாகத்தின் செயல்பாடுகளாக அநேகம் சிறு பத்திரிகைகள் தோன்றியிருக்கின்றன. எழுத வேண்டும் என்ற உணர்வோடு கையெழுத்துப் பத்திரிகையாக ஆரம்பித்து, பின்னர் அச்சுப் பத்திரிகையாக மலரும் முயற்சிகள் பல உண்டு.