பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53. கணையாழி


‘கணையாழி‘ 1965—ல் புதுடில்லியில் தோன்றியது. டில்லியிலிருந்து வெளிவரும் ஒரே தமிழ் இலக்கியப் பத்திரிகை என்ற தனிப் பெருமை அதற்கு வாய்த்தது.

டில்லியில் வசித்த தமிழ் எழுத்தாளர்கள் அதில் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் அதிகமாக எழுதினார்கள். டில்லி நகரச் சூழலை, அங்கு வாழ்கிற மக்களின் போக்குகளை, அரசியல்வாதியின் தன்மைகளை விவரிக்கும் கதைகளும் தொடர்கதைகளும் கணையாழிக்கு ஒரு தனித்தன்மை சேர்த்தன. பிறகு அது சென்னைக்கு வந்தது.

1965லிருந்து கணையாழியின் வளர்ச்சியைக் கணித்து ஒரு வாசகர் எழுதிய விரிவான கடிதம் 1984 செப்டம்பர் மாதக் கணையாழியில் ‘கணையாழிக்கு 20‘ என்ற தலைப்பில் பிரசுரமாயிற்று. நேர்மையான அந்த மதிப்பீட்டை இங்கு எடுத்து எழுதுவது பொருத்தமாக இருக்கும்.

“65 லிருந்து 70வரை டெல்லி வட்டார அறிவுஜீவிகளுக்காக நடத்தப்பட்டு வந்த கணையாழி தமிழ்ப் பிராந்திய மக்களையும் எட்டும் அளவிற்கு 70களில் தன்னை மாற்றிக் கொண்டது...

கணையாழி தொடர்வதற்குக் காரணம், வெறுமனே அறிவுலக முகமூடியை அணிந்துகொண்டு பயமுறுத்தாமல் நவீன இலக்கியத்தில், சமூகத்தில், கலாச்சாரத்தில் தெளிவான பிரக்ஞையோடு வெளியாவது தான். முதல் ஐந்தாண்டுகளைத் தவிர்த்து அடுத்த ஐந்தாண்டுகளைப் (70-75) பார்த்தால், கணையாழியில் கஸ்தூரிரங்கன் அரசியல் கட்டுரைகள் எழுதி அகில உலக அரசியலை அலசி வாசகர்களுக்குக் கருத்து பரிமாறுவார். என். எஸ். ஜெகந்நாதன் ‘என்னைக் கேட்டால்’ என்று ஆரம்பித்து சமூக அரசியலைத் தெளிவுபடுத்துவார். ஸ்ரீரங்கம் எஸ். ஆர். விஷயங்களை விவாதப் பொருளாக்குவார். பெரியவர் க. நா. சு. கவிதையில் சுயசரிதை சொல்வார். வைதீஸ்வரனும், தி. சோ. வேணு கோபாலனும், பாலகுமாரனும், கல்யாண்ஜியும், சேவற்கொடியோனும் புரியும்படியான புதுக்கவிதை படைப்பார்கள். தி. ஜா. ரா., இ. பா. பிரச்னைக் கதைகளை எழுதி வாசகர்களைத் திணறடிப்பார்கள். ஆதவன்,