பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

313


வெறுமனே கதைகள், கவிதைகள் எனப் பக்கங்களை நிரப்பிவிட்டு, வாசகனைப் பிரக்ஞையற்ற ஒருவித மாயைக்கு இட்டுச் செல்வதாக உள்ளது ( ஒருவேளை தீவிரமான இலக்கியப் பத்திரிகைக்கு இதுதான் அடையாளமோ ! ).

83-84-ல் பிரசுரமான போட்டிக்கான நெடுங்கதைகளான அ. நாகராசனின் ‘கொடுகொடியாட்டம்‘, ம. வே. சிவக்குமாரின் ‘கடைச்சங்கம்,‘ சார்வபௌமனின் ‘தோப்பில் தனிமரம்,‘ விட்டல்ராவின் நெடுங்கதை மற்றும் அநந்தநாராயணனின் ‘யக்ஞம்‘ என வெற்றிப்பட்டியலில் கடைசியாக 20 ஆண்டு நிறைவிதழில் தி. ஜா. ரா. நினைவார்த்த போட்டிக் கதையான விசாலாட்சியின் நெடுங்கதை அனைத்தும் பிராமண சமுதாயத்தின் கழிவிரக்கங்களை வெளிக்கொட்டும் ஒரு தொட்டியாய் கணையாழியை உபயோகப்படுத்திக் கொண்டுள்ளவைதான். காகுத்தன் எழுதியிருந்த ‘இப்படி‘ மரபுகளால் மன்னிக்க முடியாத—ஆனால் மரபிற்கெல்லாம் உயிர் கொடுக்க விரும்பாத எதார்த்தமான எதிர்மறைக் கருத்துக்களை வெளிப்படுத்தியதால் ஒரு அந்தஸ்து பெறுகிறது. யன்மே மாதா எழுதி மந்திரக்கோல் வீசிய ம. ந. ராமசாமியின் ‘மாதே ஸ்வதந்திர தேசம்‘ ஆக்க பூர்வமான சமகாலத்து எழுத்து என்ற வகையில் பாதுகாப்பாகப் படிக்க வேண்டியது. இளம் கம்யூனிஸ்டுகளுக்கு பூச்சாண்டி காட்டும் வேலையைச் சரியாகவே செய்துள்ளார்.

80க்கு மேல் வந்த கதைகளில் சமகால சமூக அரசியல் பிரக்ஞையைக் கதையின் பின்னணிக் கருவாகக் கொண்டு படைக்கப்பட்ட கணையாழி நாவல்கள் செ. யோகநாதன் எழுதிய ‘இரவல் தாய்நாடு‘, ரவீந்திரனின் ‘ரத்தம் ரத்தம் கொள்ளும்‘ இரண்டும் சிறப்பான முயற்சிகள்; அவ்வப்போது கணையாழி சிறப்பாக இருந்தாலும், தன்னை கதை, கவிதைகளுக்குள்ளேயே புதைத்துக் கொள்ளும் நெருப்புக் கோழித்தனம் கணையாழியின் அறிவார்த்தமான வாசகர்களுக்கு உடன்பாடானதாக இருக்காது.

கணையாழி கவிதைகள் (தற்சமயம்) பற்றிச் சொல்லுமிடத்திலும் கணையாழி அக்டோபர் 73 தலையங்கத்தை நினைவுகூர வேண்டியுள்ளது. கணையாழி அலுவலகத்தில் குப்பைக் கூடைகள் பெருகிவிட்டன. புதுக் கவிதை எப்படி இருக்கவேண்டும் என்று தெரியாமல் இருப்பதற்கு நியாயமே இல்லை (கணையாழிக்கு).

கடைசியாக ஒன்று, கணையாழியின் ஆரம்பகால முதல் இன்றைய வரை தொடர் வாசகர்களாய் இருக்கும் எங்களைப் போன்ற வாசகர்களை