பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

வல்லிக்கண்ணன்


பிரதிகளைப் பெற்று, விற்பனை செய்து, உரிய பணத்தை அனுப்பிக் கொண்டிருந்தனர்.

இன்றைய சிறு பத்திரிகைகள் போல் இவை மிகவும் குறைச்சலான பக்கங்களே கொண்டிருந்ததில்லை. 'பெரிய பத்திரிகைகள்' (வாணிபப் பத்திரிகைகள் ) மாதிரியே பக்க அளவில் கனமாகவும் (80 அல்லது 96; சில சமயம் அதுக்கும் மேலாகவும்) இருந்தன (64 பக்கங்களுக்குக் குறைந்ததில்லை). வாசகர்களை ஈர்க்க வேண்டும் என்று அவ்வப்போது போட்டோக்கள், சினிமா விஷயங்கள் முதலியனவும் சேர்த்து வந்தன. ஆர்ட் பேப்பர் அட்டையும், அட்டைப் படமும் கொண்டிருந்தன.

‘மணிக்கொடி' ஆயிரம் பிரதிகள் வரை அச்சிடப்பட்டிருக்கலாம். ‘கலாமோகினி' 700 முதல் ஆயிரம் வரை ஏற்ற இறக்கம் பெற்றிருக்கலாம், 'கிராம ஊழியன்' அதிகமாக 800 பிரதிகளும், குறைந்த காலத்தில் 600 பிரதிகளும் அச்சாகி வந்தது. இதர பத்திரிகைகளும் இதே தரத்தவைதான்.

ஆனாலும், சிறு பத்திரிகை என்று பேசப்படுகையில், இதுவரை கூறப்பட்ட பத்திரிகைகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன. காரணம், தன்மையினால்- செயலாற்றலால்- அவை சிறு பத்திரிகைகளாகவே இயங்கின.

அவை ஜனரஞ்சகமான விஷயங்களைப் பிரசுரிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை. தரம் குறைந்த எழுத்துகளுக்கு இடம் தந்ததில்லை. சிந்தனைகளுக்கும் உணர்ச்சிக்கும், புதுமைக்கும் சோதனைகளுக்கும் இடமளித்தன. புதிய திறமையாளர்களை வரவேற்று அங்கீகரித்தன. இலக்கிய நோக்கிற்கு வரம்பு கட்டிக்கொள்ளாமல், உலகளாவிய பரந்த நோக்குடன் செயல்பட்டன.

இத்தகைய பத்திரிகைகள் ஏன் நீடித்த ஆயுளுடன் வாழமுடிந்த தில்லை-ஏன் அல்பாயுசு மரணம் பெற்றன என்று அவ்வப்போது கேள்வி கேட்கப்படுகிறது.

போதிய பொருளாதார பலம் இல்லாமல் போனதுதான் முதல் பெரும் காரணம். அவற்றின் விற்பனைக்குப் பொறுப்பேற்ற அன்பர்கள் நாணயமாக நடந்து கொள்ளாதது மற்றொரு காரணம். பத்திரிகைப் பிரதிகள் விற்பனையான போதிலும், விற்பனையாளர்கள் ஒழுங்காகப்