பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

வல்லிக்கண்ணன்


ராமாம்ருதம் கலைத்திறன்', 'மௌனியின் மனக் கோலம ஆகிய கட்டுரைத் தொடர்களையும் எழுதினார். இவை எல்லாம் சிறந்த இலக்கிய விமர்சனக் கட்டுரைகளாகும்.

‘ஜீவனாம்சம்' என்கிற சோதனை ரீதியான நாவலை செல்லப்பா எழுத்தில் தொடர்ந்து எழுதினார். அருமையான சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்.

மொழிபெயர்ப்பிலும் அவர் சோதனைகள் நடத்தினார். சரளமான இனிய நடையிலோ, எல்லோருக்கும் புரியக்கூடிய எளிய நடையிலோ மொழிபெயர்ப்புச் செய்வதன் வாயிலாக, ஆசிரியர்களின் எழுத்தாற்றலை வாசகர்களுக்கு உணர்த்த முடியாது. ஒவ்வொரு எழுத்தாளரின் நடை ஒவ்வொரு தினுசானது. அவரவர் தனித்தன்மையை எடுத்துக் காட்டுவதற்கு வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு செய்வதுதான் நியாயம் ஆகும் என்பது செல்லப்பாவின் கருத்து.

அதன்படி, ஹென்றி ஜேம்ஸ் எழுதிய 'புரூக்ஸ்மித்', ஆன்டன் செகாவின் 'கூஸ்பர்ரிஸ்', ஃப்ராங்க் ஓ கானரின் 'ஞானஸ்நானம்', வில்லியம் ஃபாக்னரின் 'கிரீர்ஸன்', ஜேம்ஸ் ஜாய்ஸின் 'எவலின்' போன்ற சிறந்த சிறுகதைகளை செல்லப்பா மொழிபெயர்த்தார்.

இவையும் மற்றும் சில கதைகளும் 'வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு' ஆக, மூல ஆசிரியனது உரைநடைப் போக்கிலேயே தமிழுக்கும் உரைநடையை இயைவிக்கும் ஒரு தோரணையில் அமைந்திருந்தன. அந்த மொழிபெயர்ப்பு நடை வாசகர்களைச் சிரமப்படுத்துகிற தமிழாக இருந்தபோதிலும், செல்லப்பா தன் சோதனையையும் கருத்தையும் மாற்றிக் கொள்ளவில்லை. -

பாரதியின் 'அக்னிக் குஞ்சு' கவிதைக்கு விரிவான விளக்கக் கட்டுரை எழுதியிருக்கிறார் அவர். தமிழ்ச் சிறுகதை குறித்து அநேக கட்டுரைகள் வெளியிட்டார்.

சிறுகதைகள் பற்றியும், உரைநடை குறித்தும் எழுத்து அதன் காலத்தில் பல்வேறு சிந்தனைகளைப் பிரசுரித்திருக்கிறது.

முதல் இதழிலிருந்தே க. நா. சுப்ரமண்யம் 'நல்ல தமிழ்ச் சிறுகதைகள்' என்று கட்டுரைகள் எழுதினார் இலக்கியத்தில் விஷயமும் உருவமும் பற்றி சிந்தனை வளர்த்தார், பாரதிக்குப் பின் என்ற தலைப்பில்,