பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

வல்லிக்கண்ணன்


1974-ல் தேவ சித்திரபாரதி தேவையில்லாத ஒரு புதுமையை ஞானாதத்தில் புகுத்தினார். கதை, கட்டுரை, கவிதைகள் எழுதியவர்களின் பெயர்களை அச்சிடாது, அவர்களது எழுத்துக்களை மட்டுமே கொடுப்பது. குறிப்பிட்ட எழுத்தை வைத்து, சம்பந்தப்பட்ட படைப்பாளி யார் என்று வாசகர்கள் கண்டுகொள்ள வேண்டும். இதனால் ரசனை வளர இடமுண்டு என்று அவர் கருதினார். உரிய பெயர்கள் அடுத்த இதழில் பிரசுரிக்கப்பட்டன. இதைப் பெரும்பாலான வாசகர்கள் வரவேற்கவில்லை. - -

1974 ஜனவரி முதல் ஞானரதம் கடைகளில் விற்பனை செய்யப்படாத-சந்தாப் பணம் கட்டிய வாசகர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய- ஒரு சிறு பத்திரிகையாக மாற்றப்பட்டது.

அதன் கடைசி இதழ் 37-39 (மே-ஜூலை 1974 ) என்று இலக்கமிடப்பட்டு, ஸோல்ஸெனிட்ஸின் சிறப்பிதழ் என்று வெளிவந்தது. அந்த இதழின் கடைசிப் பக்கத்தில் காணப்பட்ட முக்கிய அறிவிப்பு

“1974 ஆகஸ்டு முதல், இப்போது இலக்கியத் துறைப் பத்திரிகையாக மட்டும் உள்ள ஞானரதம் மானிட இயல்கள் (Humanities) அனைத்துக்குமான பத்திரிகையாகப் பரிணாமம் பெறுகிறது.

இதற்கிசைவாக திரு. கந்தர ராமசாமியின் தலைமையில் பல்வேறு துறைகளையும் சேர்ந்த அறிஞர்களைக் கொண்ட புதிய ஆசிரியர் குழு ஆகஸ்டு 1974 முதல் பொறுப்பேற்கிறது.

ஆகஸ்டு முதல், ஞானரதம் இதே அளவில் 80 பக்கங்களுடன், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கலை அம்சங்களுடன் வெளிவரும். தனி இதழ் விலை ரூ. 2 ஆண்டுச் சந்தா ரூ.12 இருக்கும்.”

இந்த ஏற்பாடு வெற்றி பெறவில்லை.

ஞானரதம் ஆசிரியர் தேவ. சித்திரபாரதி வலியுறுத்தி வந்த கருத்து நினைவுகூரத்தக்கது- .

“நாமெல்லாம் உண்மையைத் தேடி வெளிப்படுத்தத் துடிக்கும் தத்துவவாதிகள் மட்டுமில்லை, கலைஞர்களும்கூட. நாம் வெளிப்படுத்தும் உண்மைகளின் புதிய பரிணாமங்கள் கலா பூர்வமாகவும், இலக்கிய நிலைகளுடனும், அழகியல் பூர்வமாகவும் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. கூடவே, வெளிப்படுத்தும் உண்மைகள் நாலு பேருக்காவது விளங்க வேண்டுமே என்ற பொறுப்பும், பிறர் புரிந்து கொள்ளும் பொதுமை அனுபவமாகவும் அவை இருந்தால் நல்லது. ஆனால் தனி அனுபவங்களுக்கு நாம் விரோதிகளல்லோம்.” ☐☐