பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14. ( அஃக் )


சேலம் ஜாகிர் அம்மாபாளையம் என்ற இடத்திலிருந்து 1972 ஜூன் மாதம், 'ஃ- ஓர் எழுத்தாயுத மாத ஏடு-' தோன்றியது.

அதன் முதல் இதழின் அட்டையும் உள் அமைப்பும் அச்சும் அழகாய், புதுமையானதாய் விளங்கின. இலக்கியவாதிகளுக்கு நிறைந்த திருப்தியும் நம்பிக்கையும் தரத்தக்க விதத்தில் உள்ளடக்கம் அமைந்திருந்தது.

அட்டை முழுவதும் ஃ என்ற எழுத்தையே மூன்று கண்களாகச் சித்திரிக்கும் வடிவங்களும், A Q என்ற எழுத்துக்களும் விரவிக் கிடந்தன. தலையங்கம், கொள்கை விளக்கம், லட்சிய முழக்கம் போன்ற சம்பிரதாயமான ஒலிபரப்புகள் எதுவும் இல்லாமலே தோன்றியது அந்தப் பத்திரிகை.

முதல் இதழில் முதலாவதாக கி. ராஜநாராயணன் எழுதிய 'ஜீவன்' என்ற அருமையான கதை. அடுத்து, வெ. சாமிநாதன் சிந்தனைகள். ‘சில கேள்விகள், சில பதில்கள், சில தெரியாது'கள்.' வல்லிக்கண்ணன் குறிப்பு ஒன்று. அம்பையின் நாடகம் 'பயங்கள்,' கடைசிப் பக்கத்தில் க. நா. சு. சிந்தனை- 'இலக்கியத்தில் சோதனை.'

இந்தப் பத்திரிகையை வரவேற்று மகிழ்ச்சி கொண்டு எழுதிய இலக்கியவாதிகளின் கடிதங்கள் பின் வந்த இதழ்களில் பிரசுரமாயின.

அ ஃ க் பத்திரிகையின் ஆசிரியர் என். பரந்தாமன். லட்சிய வேகமும், கற்பனை உள்ளமும், கலையாற்றலும், துணிச்சலும், புதுமை வேட்கையும், செயல் துடிப்பும் நிறைந்த இளைஞர், கவிஞர், ஓவியர். புதிய சினிமா முயற்சிகளில் அக்கறை கொண்டவர். ஜெயகாந்தன் ஆசிரியராக இருந்த காலத்திய 'ஞானரதம்' பத்திரிகையுடன் தொடர்பு கொண்டிருந்தவர். தரத்தில் உயர்ந்த இலக்கியச் சிற்றேடு ஒன்றை நடத்த வேண்டும் என்ற தவிப்பை வளர்த்தவர்.

அந்த எண்ணம் அவருள் 1970 லேயே கருக்கொண்ட போதிலும், இரண்டு ஆண்டுகள் அவர் பூர்வாங்க முஸ்தீபுகளில் முனைந்து-