பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15. நீலக்குயில்


கோவில்பட்டியில் ஒரு சிறு பத்திரிகை தோன்றியது, 1974-ல். ‘நீலக்குயில்' என்பது அதன் பெயர். எஸ். அண்ணாமலை அதன் ஆசிரியரும் வெளியிடுபவருமாக இருந்தார்.

‘உண்மை இலக்கியங்களுக்கு ஒரு மேடை அமைத்துக் கொடுக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் வெளியிடப்படுவதுதான் இந்த இலக்கியப் பத்திரிகை' என்று அதன் முதல் இதழில் அறிவிக்கப்பட்டது.

அண்ணாமலை எழுத்தாளர் இல்லை. கோவில்பட்டியில் வியாபாரப் பிரமுகர்களில் ஒருவர். அவ்வூருக்கு அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் வசிக்கும் கி. ராஜநாராயணன் அவருக்கு நல்ல நண்பர். காலம் சென்ற கு. அழகிரிசாமியையும் அவர் அறிவார். ஆகவே, இயல்பாக அவருக்கு இலக்கியத்தில் ஒரு ஈடுபாடு இருந்தது. கோவில் பட்டியில் வளர்ந்து கொண்டிருந்த இளைய தலைமுறை எழுத்தாளர்கள் சிலரும் அவருக்கு நண்பர்களாக இருந்தார்கள். இதனால் எல்லாம், 'ஒரு இலக்கியப் பத்திரிகை நடத்த வேண்டும்' என்ற ஆர்வம் அவருக்கு ஏற்பட்டிருந்தது.

தனது பத்திரிகைக்கு 'நீலக்குயில்' என்ற பெயரை வைக்க வேண்டும் எனும் ஆசை அவருக்கு ஏற்பட்டது. மகாகவி பாரதி 'குயில் பாட்டில் இந்தச் சொல்லை உபயோகித்து இருக்கிறார்' என்பதனால் அல்ல. அந்தக் காலத்தில் நீலக்குயில் என்றொரு மலையாள சினிமாப் படம் வெற்றிகரமாக ஓடிப் பெயர் பெற்றிருந்தது. இதன் கதை, நடிப்பு, இனிய பாடல்களினால் மிகப் பலரது கவனத்தையும் அந்தப் படம் ஈர்த்திருந்தது. அண்ணாமலையும் வசீகரிக்கப்பட்டிருந்தார். 'நீலக்குயில்' என்ற சொல் அவருக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. ஆகவே, அவர் தமது பத்திரிகைக்கு அந்தப் பெயரையே வைத்துவிட்டார்.

‘நீலக்குயில்' முதலாவது இதழ் 1974 மே 1-ம் தேதி வந்தது. காசி விஸ்வநாதன், தேவதச்சன், பரணிகுமார், பானு கவிதைகள் (புதுக் கவிதை), பூ மணி, கௌரிஷங்கர் கதைகள், 'குறியீட்டுக்