பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 ஒரு மனிதன் தனது ஐம்பொறிப் புலன்கள் விஷயங்களில் ஈடுபாடு கொள்ளுவதற்கிடையில் உண்டாகும் விருப்பு வெறுப்புகளின் தராதரத்தால் மனிதர்களின் இயல்புகள் கணக்கற்ற விதத்தில் பிரிகின்றன. மல்லிகைப்பூவின் மணம் பொதுவாக விரும்பத்தக்கதே. எனினும் மல்லிகை மணத்தை வெறுப்பவரும் உண்டு. மல்லிகை மணம் ஒருவருக்குத் தலைவலியை உண்டாக்கலாம். பாலியல் உணர்வைத் தூண்டி அமைதியிழக்கச் செய்யலாம். இவ்வாறு பற்பல காரணங்கள். நறுமணத்தை வெறுப்பவரும் இருக்கின்றனர். கடவுள் வழிபாட்டிற்குரியது என்று கருதுவோர் மல்லிகையின் பெருமித நறுமணத்தைப் போற்றுவர். இப்படியே பஞ்சேந்திரியங்கள் வாயிலாக எல்லாப் பொருள்களிடத்தும் வெவ்வேறு படித்தரங்களில் விருப்பு வெறுப்புகள் தோன்றுகின்றன. வளர்கின்றன. இவ்விருப்பு வெறுப்புகளின்தொகை வகையே மனிதர்களின் இயல்பாகப் பரிணாமம் பெறுகிறது. பல தலைமுறைகளின் வாயிலாக மனித இயல்புகள் படிந்து படிந்து பரிணமித்துப் பரிணமித்து வருவதால் இவற்றை ஒரு நொடியில் மாற்றி அமைத்து விடமுடியாது. பன்னீராண்டுக்காலம் தொடர்ந்து மழை பெய்யாது போனாலும் பரம்பரைக் குடியானவன் நிலத்தில் சாகுபடி செய்யாமல் இருக்கமாட்டான். ஆனால் வாணிபன் ஒருவன் உழவுத் தொழிலில் ஈடுபட்டால் ஓராண்டு மழை இல்லாவிட்டாலும். சோர்வடைந்து சாகுபடி செய்வதை நிறுத்திவிடுவான். எனவே ஒருவனது இயல்பை அவ்வளவு எளிதில் மாற்றவோ திருத்தவோ இயலாது. படித்தரங்கள் காலப்போக்கில் தான் நிகழும். ஒவ்வொரு மனிதனும் தத்தம் மனப்பாங்கிற்கு ஏற்ப வினைபுரிவர். அதாவது வினையாற்றல், செயல்புரிதல், கர்மம் செய்தல், ஆகிய மூன்றும் ஒன்றே. வினையாற்றல் உயிர் இயற்கை. 'வினையே ஆடவார்க்கு உயிரே' என்று குறுந்தொகை கூறுகிறது. அது ஆக்கம்தரும் செயல். சமய உலகில் பெரும்பாலோர் எதிர்விளைவைப் பற்றி மட்டுமே கூறிவருகிறார்கள். அது ஒரு சார்புடையதாகும். வினையின் விளைவு மக்களுக்குப் பொருளாக்கம்; மக்களுக்கு வாழ்வு. சமய உலகத்தவரும் வினை செய்தலை ஒருபோதும் வேண்டாம் என்று வலியுறுத்திப் பேசவில்லை;கூறவும் இயலாது. சமயங்கள் இறைவனே ஐந்தொழில் புரிகின்றான் என்று கூறுகின்றன. சமய உலகமும் தொண்டு செய்யுமாறு பணிக்கிறது. திருத்தொண்டு செய்யுமாறு உணர்த்துகிறது. எண்ணம், சொல், தொண்டு எல்லாமே வினைதான். கர்மம் தான் சொற்களால் வரும் செயலாக்கங்களை