பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலுமிலமே; மின்னொடு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே (புறம். 192) பொருள்: எவ்வூராயினும் எம் ஊரே! யாவராயினும் அவர் எம் உறவினரே; தீதும் நன்றும், நோதலும் தணிதலும், பிறரால் வருவதல்ல; நம்மாலேயே விளைவதாம். சாதலோ இவ்வுலகில் புதிய செய்தியன்று. வாழ்தலே இனிது என மகிழ்வதும், வெறுத்து அதனை இன்னாதென ஒதுக்குதலும் இல்லோம். பேரியாற்று நீரிலே செல்லும் மிதவை போல எம் அரிய உயிரானது முறையாகச் சென்று கரைசேரும் என்பதனைத் திறனுடையோர் நூல்களால் தெரிந்து கொண்டோம். எல்லாம் ஊழ்வினைப் பயனே என்று தெரிந்து கொண்டதால் செல்வத்தாற் பெரியவரைப் போற்றுதலும் செய்யோம். சிறியோரை இகழ்தலும் செய்யோம். அவரவர் நல்லுள்ளப்பான்மை ஒன்றே யாம் கருதுவோம். தமிழ் நெஞ்சத்தின் உலகந்தழுவிய உயர்ந்த பாங்கும், வாழ்க்கையை அமைந்தவாறே ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் போற்றத்தக்கன!