பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 இந்த இரண்டு வகையான தரிசனங்களும் இந்திய மக்களால், தத்தம் விருப்பத்திற்கேற்பப் பின்பற்றப்படுகின்றன. வேதத்தை ஏற்றுக்கொண்ட தரிசனங்கள் உயர்ந்தவையா? வேதத்தை அங்கீகாரம் செய்யாத தத்துவங்கள் உயர்ந்தவையா? அதன் அதன் போக்கிலே அது அது நடைபெற்று வருகிறது. உயர்வு தாழ்வு கற்பிப்பதால் யாதொரு பயனும் இல்லை. பிணக்குகளே மலியும். எனவே சத்திய நாட்டம் மட்டுமே பிரதானமாக இருக்கவேண்டும். அறுவகை வைதீக ஏற்பாடுகள் நேரடியாகவே வேதங்களிலிருந்து வளர்ந்து ஓங்கின. 'தரிசனம்' என்றால் காட்சி அல்லது பார்வை என்று பொருள்படுகிறது, தரிசனம் என்பது ஓர் தத்துவமுறை. தரிசனத்தை ஒட்டிய இலக்கியம் இறைத் தத்துவமணம் நிறைந்தது. ஒவ்வொரு தரிசனமும் உண்மைப்பொருளாம் பரம்பொருளைக்காணும் வழி அல்லது நோக்கு நிலையாகும். கௌதம முனிவர் இந்தியத் தருக்கம் அல்லது நியாயத்தின் அறநெறிக்கொள்கைகளை (விதிகளை) ஒழுங்குபடுத்தியுள்ளார். காணாதர் வைசேடிக சூத்திரங்களைத் தொகுத்துள்ளார். கபிலமுனிவர் சாங்கிய ஏற்பாட்டினை உண்டாக்கினார். பதஞ்சலியின் யோக சூத்திரங்கள் வேதத்தின் சடங்குகளை ஒட்டிய பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டவை. அவை வியாசபகவானின் சீடரான ஜெய்மினி என்பவரால் இயற்றப்பட்டவை. வேதாந்தத்தின் வெவ்வேறான கொள்கைகள் தம்தம் கடவுள் தத்துவங்களை இச்சூத்திரங்களின் அடிப்படையில் வைத்துக் காட்டியுள்ளன. மக்களின் வெவ்வேறான இயல்புகள். ஆற்றல்கள், மனோசக்திகள், ஆகியவற்றிற்கேற்ப இலட்சியத்தை அணுகுவதற்கான வழிகள் அல்லது முறைகள் வேறுபடுகின்றன. ஆனால் அவைகள் எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு நோக்கம்தான் உண்டு. அதாவது அஞ்ஞானத்தைப் போக்குதல், அதன் பலன்களாகிய தொல்லைகள், துன்பங்கள் ஆகியவற்றை அகற்றுதல், விடுதலை பெறுதல், முழுத் தன்மையடைதல், இறுதியில் ஞானத்தின் மூலம் அழியாப் பேரின்பத்தை அடைதல். இந்தத் தத்துவ முறைகளைக் கற்றல் கூரிய அறிவையும், பரந்த அறிவையும் அளிக்கும். உண்மைப் பொருளைப் பற்றிய பரந்த தெளிந்த அறிவு உண்டாகும். மனத்தின் கண் பொதிந்துள்ள அறிவு மேலோங்கி, அதனால் பெறும் இன்பம் பன்மடங்காகப் பெருகும்.