பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கற்றறிவாளர் தத்துவங்கள் என்றும் டாக்டர் இராதாகிருட்டிணன் வகைப்படுத்துகிறார். இந்த வரையறைகள் முறையானவைகளா? சரியானவைகளா? என்று ஆராய்ச்சியில் காலங்கழிப்பது வீண் வேலையாகும். அவை தத்துவங்களை உணர்ந்து கொள்ள ஓரளவு உதவும் என்பதில் கருத்து வேறுபாடு வேண்டியதில்லை. மதம் சார்ந்த அறுவகை இந்தியத் தத்துவமுறைகள் அல்லது அறுவகைத் தரிசனங்கள் எனப்படுபவை தத்துவத்தின் அறுவகை வைதீக ஏற்பாடுகளாகும். தத்துவ வைதீக முறைகள் வேதாந்தங்களின் அதிகாரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளன. இந்த ஆறு தரிசனங்களும் நித்தியமாயுள்ள சத்தியப் பொருளைக் காணும் வழிகளாகும். அவை, பூர்வ மீமாம்சம் உத்திர மீமாம்சம் சாங்கியம் யோகம் வைசேடிகம் நியாயம் அல்லது (இந்திய வாதம் ) என்பனவாகும். இன்னொரு ஆறுவகைத் தரிசனங்கள் மத நம்பிக்கையில்லாதவை. வேதங்களின் அதிகாரத்தை, ஆதிக்கத்தை மறுப்பவை. வையத்தில் வாழ்வாங்கு வாழ மனிதனுக்கு உதவும் உயர்ந்த கோட்பாடுகளையும் ஒழுக்க நெறிகளையும் வகுத்துக் கூறுபவை. வேதத்தை அடிப்படையாக ஏற்றுக் கொள்ளாத தரிசனங்கள் முறையே, 1. சாருவாகத்தின் உலகாயுதக் கொள்கை 2. மாத்யமிகர்களின் சூன்யவாதக் கொள்கை 3. யோகாசாரத்தின் இலட்சிய வாதக்கொள்கை 4. வைபாஷிகர்களின் பிரதிநிதிகளின் கொள்கை 5. சாத்ராணிகத்தின் நிரூபண வாதிகளின் கொள்கை 6. ஜெயினரின் கொள்கை என்பவையாம். இங்கு வரிசையாகக் கூறப்பட்டவற்றுள் இடைப்பட்ட(2- 5) நான்கு கொள்கைகளும் புத்தரின் கொள்கைகளாகும்.