பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 இருள்மலம் என்பது அஞ்ஞானத்தில் திளைத்திருக்கிற மனவிகாரமாகும். சகோதரனும் சகோதரியும் ஓர் இடத்தில் பக்கம் பக்கமாக அமர்ந்திருக்கிறார்கள். பரஸ்பரம் அவர்கள் கொண்டுள்ள பான்மை அருளைச் சார்ந்ததாகும். வழியில் போகிற ஒருவன் அவர்களைக் காதலர்கள் எனக் கருதுகிறான். அவன் உள்ளத்தில் பூண்டது இருள்மலம் அல்லது அறிவின்மையால் உதித்த கோணலான மனப்பான்மை. எவ்வளவுக்கெவ்வளவு ஒருவன் அஞ்ஞானத்தில் தோன்றியுள்ள மனம் என்னும் மலத்தைக்கொண்டு பிரபஞ்சத்தில் உழல்கின்றானோ அவ்வளவுக்கவ்வளவு அவன் கீழ்மை அடைகிறான். பிரபஞ்ச நாட்டம் உள்ளத்தில் உருவெடுக்க இடந்தரலாகாது. பிரபஞ்ச நாட்டம் உள்ளத்தில் தீமையை வளர்க்கிறது. அருளைத் துணையாகக் கொண்டு பரத்தையே காண முயல்கின்றவனுக்கு மேலும் மேலும் நன்மை உண்டாகிறது. நன்மையை வளர்ப்பதற்கான பேரருள் எனக்குச் சொந்தமாயிருக்கையில் தீமையை வளர்ப்பதற்கான கோணலான மனப்போக்கில் நான் போய்க்கொண்டிருப்பது பொருந்துமா? அது ஒரு நாளும் பொருந்தாது என்பதே இக்கண்ணியின் கருத்தாம். இக்கண்ணிகள் மனிதன் மேல்நிலை அடையவேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன. மனிதன் ஒருவன் கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்குப் போவதற்கு அவனே பொறுப்பாளியாகின்றான். அவன் மேற்கொள்கின்ற முயற்சிக்குத் தக்கவாறு கீழ்மையும் மேன்மையும் வந்தடைகின்றன. தான் அடைந்துள்ள நிலைக்குத்தானே பொறுப்பாளி என்னும் உணர்வு இன்னும் மேல்நிலையை எட்டுவதற்குத் தூண்டுகோலாக இருக்கிறது. "தானே தனக்குச் சுற்றமும் தானே தனக்கு விதிவகையும்" என்பது முன்னோர் வாக்கு. இக்கோட்பாடு பரிணமித்து மேலே வருகின்ற மனிதனுக்கு முற்றிலும் பொருத்தமானது. மனிதப் பிறவியில் பிரபஞ்ச வாழ்வைப் பற்றிய உண்மை சிறிதுசிறிதாக விளங்கி வருகிறது. இன்பம் துன்பம் ஆகிய இரண்டும் மாறி மாறி வருவது பிரபஞ்ச வாழ்க்கையின் மாயையின் இயல்பு. துன்பம் கலவாத இன்பத்தை மனிதன் பிரபஞ்சத்தில் தேடுகிறான். அத்தகைய இன்பம் ஒருநாளும் கிட்டாது. துன்பம் என்னும் விலை கொடுத்தே இன்பத்தை ஈண்டுப் பெறமுடியும். இந்த நிர்பந்தத்தை முன்னிட்டு விவேகம் படைத்துள்ள மனிதனுக்குப் பிரபஞ்ச வாழ்க்கையில் பற்று குறைகிறது. ஆத்மசாதனத்தில் அவன் ஈடுபடுகின்றான். ஆத்மசாதனம் ஓங்குதற்கேற்பப் பிரபஞ்சப் பற்றும் குறைந்து மறைந்து போகிறது.