பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 மேல்நிலைக்குப் போகப் போக யான் எனது என்னும் செருக்கு பின்னணிக்குப் போகிறது. தன்னை மறந்து ஈடுபட ஈடுபடப் பரபோதம் முன்னே நிற்கத் தொடங்குகிறது. நானும், தானும் ஒன்றே என்னும் தெளிவு ஏற்படுகிறது. கடலை அடைகின்ற நதி ஒன்றை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். கடலை நெருங்குகின்ற பொழுது கடலின் பாங்காகிய பொங்குதல் வடிதல் என்னும் செயல்கள் நதியின்பாலும் தோன்றுகின்றன. கடலை அடைந்த பிறகு நதியின் பங்காகிய நல்ல நீர் சிறிதளவு அதனிடத்து இருக்கிறது. கடலுக்குள்ளே முற்றிலும் நுழைந்து இரண்டறக் கலந்த பின் நதி காணாமல்போய்விடுகிறது. கடலாக அது நிலைத்திருக்கிறது. அதேபோல் ஜீவாத்மன் பரமாத்மனில் இலயமாகும் தறுவாயில் ஜீவபோதம் பரபோதமாக மேலோங்குகிறது. மாயை முற்றிலும் மறைகிறது.