பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. ஞானியர் நிலை (தத்துவ தரிசனம் பெற்றவர்) 'மௌனகுரு' போலப் பரிபூரண நிலையை அடைந்திருப்பவர்கள் ஞானிகள் என இயம்பப்படுகின்றனர். நிறைவு அனைத்தையும் அவர்களிடம் காணலாம். நல்ல ஒழுக்கத்துக்கும் அவர்களே சான்று ஆகின்றனர். பிறந்தும் புல்லிய இயல்புகள் அவர்களிடத்திருந்து வடிவெடுக்கமாட்டா. சிற்றியல்புகள் உள்ளத்தின் உள்ளே மறைந்து கிடந்தாலும் அவர்கள் ஞானத்திற்குத் தகுதியுடையவர்கள் ஆகமாட்டார்கள். மனம், மொழி மெய் ஆகிய மூன்றிலும் தூய்மையடைந்துள்ளவர் ஆகின்றனர். ஞானத்திற்குப் பரிபாகம் ஆகிக் கொண்டிருக்கின்ற பொழுதும் ஞானத்தை முற்றிலும் அடைந்தான பிறகும் புறத்தோற்றத்தில் அவர்கள் சிறுகுழந்தைகள் போன்றோ பேய் பிடித்தவர் போன்றோ பித்துப்பிடித்தவர் போன்றோ தோன்றலாம். ஆயினும் நிறை ஞானிகளுக்கும் இந்த மூன்றுவித மக்களுக்கும் இடையில் வெகுதூரமாம். சித்தர் பலர் இவ்வாறு இருந்திருக்கின்றனர். தாயுமானவரின் குரு மௌனவிரதம் பூண்ட ஞானியாவார். பேசாத நிலையில் இருந்துகொண்டே தனது மாணாக்கர் தாயுமானவருக்கு அரிய பெரிய கருத்துக்களை ஊட்டிவந்தார். அது எப்படி முடியும்? இது சரியான ஐயமே. பேச்சின் மூலமே புகட்டுவதைவிடச் சிறந்தது மௌனநிலையில் இருந்துகொண்டு புகட்டுவது. சிஷ்யன் பக்குவமடைந்தவனாக இருப்பானாகில் குருவினுடைய மௌன உபதேசம் அவனுடைய உள்ளத்தில் வடிவெடுக்கிறது. பேச்சின் துணையின்றி மனத்தோடு மனம் பேசுகிறநிலை பக்குவமடைந்திருப்பவர்களுக்குச் சாத்தியமாகிறது. இந்நிலையை அடைந்திருப்பவர்களுக்கு மொழி இடைஞ்சலாகிறது. இங்கு மௌனகுருவினுடைய பரிபாகத்திற்கு அருகில் வந்துள்ள நிலையில் தாயுமானவர் இருந்தார். ஆதலால் அவருடைய கருத்துக்களையெல்லாம் சொல்லின் உதவியின்றிச் சிஷ்யர் ஏற்றுக்கொண்டார். அப்படி ஏற்றுக்கொண்டதால் ஞானத்தெளிவும் பரமானந்தப்பேறும் சிஷ்யருக்குக் கிடைத்தன.