பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 உயிருள்ள உடம்பில் எப்போதும் அளவான வெப்பம் இருந்து வினையாற்றிக் கொண்டேயிருக்கும். வெப்பம் அளவில் குறைந்தால் குளிரும். வெப்பம் மிகுந்தால் காய்ச்சல் உண்டாகும். நம் உடல் என்னும் பிண்டத்தில் பெரும்பகுதி நீரே. எனவேதான் அறிஞர் பெருமக்கள் அண்டமும் பிண்டமும் ஒன்றே என்றனர். காற்றில் புயலும் சூறாவளியும் உண்டாகி மக்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. அதுபோலவே மனதில் வீசும் புயல் சிலவேளைகளில் மனிதனை மிருகமாக்கிக் கொலை களவு போன்றவற்றில் தள்ளிவிட்டு வாழ்க்கையின் போக்கைத் தலைகீழாக மாற்றி நசுக்கி விடுகிறது. உணவில்லாத வயிறு உலைக்களம் போல் எரியும். நீரில் மூழ்கித் திளைத்தல் ஒன்று. நீரில் மூழ்கி மடிதல் இன்னொன்று. மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளம் அழுந்துதல் உண்டு. கடனில் மூழ்கிக் குடி முழுகிப் போதலும் உண்டு. இந்த வகையிலும் அண்டபிண்ட விளக்கங்கள் உள்ளன. ஐம்பெரும் பூதத்து இயற்கையாய் விளங்கும் அண்டத்தில் எவ்வாறு உயிர்கள் தோன்றின என்பதற்குத் தரும் காரணகாரிய விளக்கங்கள் ஓரளவே உண்மையானவை. இம்மண்ணுலகம் பல நூறாயிரம் ஆண்டுகட்கு முன் நெருப்புப் பிழம்பாக வீசப்பட்ட ஒரு பொருள் ஆகும். மண்ணுலகம் சூரியன் கருப்பத்திலிருந்து சுழற்றி எறியப்பட்ட பொருள் ஆகும். பின்னர் அது எண்ணிலடங்கா பௌதீக, வேதியியல் மாற்றங்களால், விளைவுகளால் உயிர்கள் தோன்றி வளர்வதற்கு ஏற்ற சூழலையும் பக்குவத்தையும் பெற மேலும் பல ஆயிரம் ஆண்டுகள் ஆயின. பண்பட்ட நிலத்தில் மட்டுமே பயிர் விளைவது போல் அமைதி நிலை பெற்ற மண்ணுலகில் உயிர்கள் தலையெடுக்கத் தொடங்கின. இம்மண்ணில் தோன்றிய உயிர்களை நிலைஉயிரி என்றும் இயங்கு உயிரி என்றும் சங்கத் தமிழ் மிகவும் அருமையான முறையில் வகுத்து லைத்துள்ளது. நிலைத்திணை என்பது நிலையாக ஓரிடத்தில் வேர் வீழ்த்தி நின்று வாழும் மரம், செடி, கொடி மற்றும் புல் பூண்டுகளாகும். இருந்த இடத்திலேயே தோன்றி வளர்ந்து பயன்தந்து மடிந்து எருவாகி மண்ணை வளப்படுத்தும் உயர்பண்பின. இயங்குதிணை என்ற தொகுதியில் இடம்பெயர்ந்து வாழும் பாங்குடைய நீர்வாழ் விலங்குகளும் நிலந்தவழ் விலங்குகளும் பறந்து திரியும் பறவையினங்களும் மாந்தர் இனமும் அடங்கும். இவ்வாறு பிரபஞ்சத்தில் வாழும் உயிர்களை இரண்டு விதமாகப் பகுத்துக் கூறுவது ஒரு மரபு.