பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அன்னத்தை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதற்கு முனிவர்களும் ரிஷிகளும் உதாரணமாகச் சொல்லப்படுகிறார்கள். அவர்கள் அன்னத்தைப் பயன்படுத்திய வழியிலேயே நாமும் செல்வது நலம் பயக்கும் என்று உணர்த்தப்படுகிறது. இல்லையேல் பெருத்த நாசம் உண்டாகும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது. அன்னத்தினால் மனிதனுக்கு மகிழ்ச்சி வளர வேண்டும். ஆனால் மனிதன். இதே அன்னத்தினால் வேதனையும் அடைகின்றான். ஏன் இப்படி நடக்கிறது? வினாவுக்கு விடைதேட வேண்டும். அன்னமே அன்னத்தைச் சாப்பிடுகிறது. அதாவது சாப்பிடப்படுவதும் சாப்பிடுவதும் ஒன்றுதான். அனுபவிப்பவன் அனுபவிக்கப்படுகிறது இரண்டுமே ஒன்றுதான். அன்னமே பிரம்மம். பிரம்மம் அர்ப்பணத்திற்கு உரியது. பிரம்மமே அர்ப்பணம் செய்யப்பட வேண்டியது. பகவத் கீதையில் கண்ணன் "கொல்பவனும் நானே கொல்லப்படுகின்றவனும் நானே" என்று கூறுகிற தத்துவம் இங்கு அன்னம் பற்றி மறைமுகமாக உரைக்கப்படுகிறது. நாம் உணவு உண்டபின் சற்றே ஓய்வாக இருக்கும்பொழுது நல்ல மனநிலையுடன் வெளியே விடப்படும் மூச்சுக்காற்றால், தாவரங்கள் உயிர் வாழ்கின்றன. 'சாப்பிடுவது' என்பது ஒரு சாதாரணமான தத்துவம்தான். அன்றாடும் நடைபெறும் செயல்தான். அதில் சில தத்துவங்கள் மறைந்திருப்பதை அதர்வண வேதம் சுட்டிக்காட்டுகிறது. தேவைக்கேற்ப உணவு அவசியம். தேவைக்கு அதிகமான உணவை ஒருவன் வைத்திருப்பது பிறருக்கு உரிய உணவைத் திருடி விட்டதாகப் பொருள். ஒருவன் அன்னத்தைப் பசிக்காக, உடல் வளர்ச்சிக்காகச் சாப்பிட வேண்டுமே தவிர அதனை ஒரு சுகபோகத்தின் சாதனமாகப் பயன்படுத்துதல் கூடாது. ஒருவன் உண்பதால், நாம் அனைவரும் உண்பதால் நாம் மட்டுமல்ல தாவர இனங்களும் நன்றாக வளர்கின்றன. நாம் விடும் மூச்சுக் காற்றே அத்தாவரங்களுக்கு உணவு. அது திரும்பத் தரும் உணவை மறுபடியும் நாம் பெறுகிறோம். எனவே, உடம்பின் முதல் அடுக்கான அன்னமய கோசம், நல்ல உணவினால் மட்டுமே வளம் பெறும். நல்ல உரம் பெறும். நல்ல உடல் வாழ்க்கையின் எல்லா முயற்சிகளிலும் உறுதுணையாய் விளங்கும்.