பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பிராணன் தத்துவம் (பிராணமய உடம்பு) பருவுடல் தத்துவத்திற்குப்பின் அடுத்து அறிந்துகொள்ள வேண்டிய தத்துவம் பிராணத் தத்துவம் ஆகும். பிராணனைப் பற்றி அறிந்துகொள்வது பிராண வித்யை (கல்வி) எனப்படும். பிராணன் பற்றிய அறிவு மிகவும் மேலானதும் அவசியமானதும் ஆகும். நம் உடலில் பலவிதமான சக்திகள் இருக்கின்றன; இயங்குகின்றன. எல்லா வகையான சக்திகளிலும் பிராண சக்தியே தலையாயது. உடலில் உள்ள பல சக்திகள் ஒன்றன் பின் ஒன்றாகச் செயல் இழந்தாலும், பிராண சக்தி தான் இயங்குவதை நிறுத்துவதில்லை. ஆனால் பிராண சக்தி செயலிழந்துவிட்டால் வேறு எந்தச் சக்தியும் செயல்படமுடியாது. பிராண சக்தியே எல்லாச் சக்திகளுக்கும் ஆதார சக்தியாகும். பிராணன் என்பது உயிர்ச் சக்தியாகும் (Life Energy). சமஷ்டிப் பார்வையில் பிராண சக்தி எங்கும் இயங்குகிறது. தனிப்பட்ட முறையிலும் பிராணன் இயங்காத இடமே இல்லை. எல்லா உடல்களுக்கும் பிராணனே பிரதானம். உயிரினங்களின் உடலில் உள்ள எல்லா அவையவங்களையும் பிராண சக்தியே இயக்கி வைக்கிறது. எல்லா அங்கங்களுக்கும் அதுவே ஆதாரம். எல்லா வகையான உடல்களும் பிராணனின் ஆட்சியில் உள்ளன. பிரபஞ்சம் முழுவதும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிராணன். தாயின் கருப்பையிலிருந்து குழந்தை வெளிவந்த உடனே உச்சந்தலை வழியாக மனித உடலுக்குள் செல்கிறது. ஆன்மாவில் பரவிவிடுகிறது. பழமும் சுவையும் போல ஆன்மாவில் பிராணன் பரவியுள்ளது. மனிதன் செயல்பாடுகளால் அது மனித உடம்புள் புகுகிறது. பிராணன் என்பது நம் உடலிலுள்ள சக்தி ஓட்டம். சுவாசப்பைகளின் (நுரையீரல்) இயக்கத்தை ஒழுங்குப்படுத்துவதாகும். இந்தப் பிராண இயக்கம் மூச்சுகளோடு இணைந்து நிற்பது. அது மூச்சினால் ஆவதல்ல. பிராணன் சுவாசப் பைகளை