பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரைப் பற்றி இந்நூலாசிரியர் முனைவர் நா.பாஸ்கரன் அவர்கள் 28.03.1955ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிக்கு அருகில் உள்ள வேலஞ்சேரி என்ற சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். காஞ்சிபுரம் அருகிலுள்ள கலவை என்ற ஊரில் உயர்நிலைக் கல்வியையும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களையும் பெற்றார். கல்லூரி நாட்களில் இக்கல்லூரியின் மாணவர் தலைவராகவும் சென்னை அனைத்துக்கல்லூரி மாணவர் தலைவராகவும் விளங்கினார். 1980 முதல் திருச்சி தேசியக் கல்லூரியின் தத்துவத்துறையில் விரிவுரையாளராகவும் 1995 முதல் 2006 வரை அத்துறையின் தலைவராகவும் பணியாற்றினார். இக்கல்லூரியில் பணியைத் தொடங்கியது முதலே ஆசிரியர் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு செயலாற்றினார். 1991ல் ஆச்சாரியா வினோபாபாவே அவர்களைப் பற்றிப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். 1993 முதல் 1995 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தில் சைவசித்தாந்தத்துறைத் தலைவராகப் பணியாற்றினார். 2006 முதல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக்கல்வி மையத்தின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். பல்வேறு கருத்தரங்குகளை நடத்தியும் ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியும் உள்ளார். இவர் எழுதிய 'உமாபதி சிவாச்சாரியாரின் திருவருட்பணி' எனும் நூலைச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருச்சியில் வசிக்கிறார். சுமார் 30 வருடம் ஆசிரியர் பணியில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டுள்ளார்.