பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள் அழிக்க லாகா அரண் (குறள் 421) என்று வலியுறுத்துகிறார். ஒருவனுக்குத் துன்பமும் அழிவும் வாராமல் காத்துக் கொள்ளும் கருவி அறிவாகும். பகைவர் உட்புகுந்து அழிக்க முடியாத கோட்டையும் அறிவேயாகும். அறிவு நேற்றைய துன்பத்தை இன்றைய இன்பமாக மாற்ற உதவுவது மட்டுமன்று. எதிர்வரும் துன்பத்தையும் தடுத்து நிறுத்தும் ஆற்றலுடையது. எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய் (குறள் 429) வரவிருக்கின்ற துன்பத்தினை முன்னதாக அறிந்து காத்துக்கொள்ளவல்ல அறிவுடையார்க்கு அவர் நெஞ்சு குலைந்து நடுங்கும்படியாக உண்டாகும் துன்பம் எதுவுமில்லை. அறிவு எவ்வாறு வளரும்? அறிவு கல்வியாலும், கேள்வியாலும் வளரும். இதனை, எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான் மொழித் திறத்தின் முட்டறுப்பான் ஆகும் மொழித் திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதல்நூல் பொருள் உணர்ந்து கட்டறுத்து வீடுபெறும் என்ற பழம் பாடலால் அறியலாம். ஒருவன் மணலின் கண் எவ்வளவு ஆழம் தோண்டுகின்றானோ அந்த அளவிற்கு நீர் ஊறும். அதுபோல ஒருவன் கற்கும் அளவிற்கு ஏற்ப அறிவு பெருகும். மேலும் மேலும் அறிவை அதிகரிக்க வேண்டும். தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு (குறள் 396) நல்ல கல்வியாலும் கேள்வியாலும் நல்லறிவே வளரும். வளரவேண்டும். ஆயின் உலகில் சிலர் உயர்ந்த கல்வி கேள்வியுடையவராயிருந்தாலும் அறிவற்றவர் போல் வாழ்கின்றனரே ஏன்? இவ்வினாவிற்கு வள்ளுவர் ஊழ் (வினைப்பயன்) என்கிறார். நல்வினை, தீவினை, ஆகியவை செய்தவனையே சென்றடைந்து பயன் ஊட்டும், 'ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்' என்பது சிலம்பின் செய்தியாகும்.