பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 எப்போதும் எலும்புகள் அனைத்தும் உள்ளே நெக்குருக ஆனந்தமாகிய தேனைச் சொரிந்து கொண்டேயிருக்கும் கூத்தினையுடைய பெருமானிடம் சென்று ஊதுவாயாக" என்பதாகும். மனிதனின் மூல சொரூபம் இயல்பான தன்மை ஆனந்தமயமானது. அது மனத்தின் செயல்களால் - மனோ விருத்திகளால் மறைக்கப்பட்டிருக்கிறது. மனிதனின் மூலசொரூபத்தை உணர்த்துவது தத்துவம். மூலசொரூபத்தை உணர்ந்து அந்த ஆனந்த நிலையை அடைய உதவுவது தியானப் பயிற்சிகள். மனிதன் (இன்பம்) மனிதன் இன்ப சொரூபமானவன். இதுவே அவனைப் பற்றிய உண்மை. ஆனந்தம் பிரம்மம். இது பிரம்மத்தைப் பற்றிய உண்மை. இனி, இன்பமும் ஆனந்தமும் ஒன்றேயாம். சொற்கள் இரண்டு. அவைகளின் பொருள் ஒன்று. மனிதன் இன்ப சொரூபம் என்பதற்கு அவனே அத்தாட்சி. அயர்ந்த உறக்கத்தில் அவன் தனது நிஜ சொரூபத்தில் இருக்கிறான். சும்மா இருத்தல் என்னும் நிலை ஆங்குத் தானாக அமைகிறது. மனத்தின் சூதுக்கு அங்கு இடமில்லை. மனிதன் தனது இயல்பான அதாவது யதார்த்த நிலையில் இருக்கிறான். இந்நிலை நனவிலும் நிலைநாட்டப்படும்பொழுது குறிக்கோளை எட்டியவனாகிறான். ஐம்பொறிகளின் வாயிலாக வருகிற இன்பங்கள் இடையிடையே தெவிட்டுவதுண்டு. ஆனால் அறிவின் மூலமாக வரும் இன்பம் தெவிட்டுவதில்லை. ஆதலால் கல்வியுடையார் கல்வியினால் வருகின்ற இன்பத்திலேயே கட்டுண்டு கிடக்கின்றனர். 'கல்வி என்னும் பல கடல் பிழைத்தும்' என்றார் மாணிக்க வாசகர். நூல் அறிவினின்று வருகின்ற இன்பம் வேறு. அருள்நிலையிலிருந்து வருகின்ற இன்பம் வேறு. இவ்விரண்டையும் வேறுபடுத்தி அறியப் பெருமுயற்சி வேண்டும். அது விளங்குகின்றபோது நிலையற்ற இன்பத்தைத் தருகின்ற உலகப்பொருள்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளுவது போன்று ஏட்டுக் கல்வியால் வருகின்ற இன்பத்தையும் ஒதுக்கித் தள்ள வேண்டியது அவசியமாகிறது. அறிவு ஆனந்தமானது. அறிவு அருளானந்தம் போலவே விளங்குவதால் அறிவானந்தத்தை ஒதுக்கித் தள்ளுவது இயலாததாகிவிடுகிறது. ஏட்டுக்கல்வி, ஏட்டுச்சுவை பரஞானத்தோடு சேர்ந்ததன்று. ஆத்ம சாதனத்தின் வழியேதான். பரஞானம் கிட்டும். தியானப்பயிற்சி நல்ல ஆத்ம சாதனமாகும்.