பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தத்துவ அறிமுகம் தத்துவம் மதத்தின் அறிவுக்கூறுகள் நிரம்பிய பகுதியாகும். அது இந்திய மதங்களின் சாராம்சம் செறிந்த பகுதியாகும். அது உண்மைப்பொருளின், பேருண்மைப் பொருளின் இயல்பிற்குள் மேற்கொள்ளப்படும் நியாயமும் உத்தியும் தழுவிய தேடுதல்கள் ஆகும். அது வாழ்வின் நுணுக்கமும் ஆழமும் மிக்க சிக்கல்களுக்குத் தெளிவான தீர்வுகளை வழங்குகிறது. அது துன்பம், மரணம் ஆகியவற்றினின்று விடுபடுவதற்கான வழியினைக் காட்டிச் சாகா நிலையையும், அழியாப் பேரின்பத்தையும் பெறும் வண்ணம் உதவுகிறது. தத்துவஞானம் மனிதன் செயல்படுவதற்கான தேவைகளில் வேர் ஊன்றித் தழைக்கிறது. மனிதன் சிந்திக்கத்தக்க நிலையில் இருக்கும்பொழுது மேம்பாடான விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறான். மரணத்தைப் பற்றிய மர்மம். சாகாநிலை பற்றிய இரகசியம், ஆன்மா, உயிர், படைப்புப் பொருள், உலகம் ஆகியவற்றின் இயல்பு முதலியவைகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கான உந்துசக்தி அவனிடம் இயல்பாகவே குடிகொண்டிருக்கிறது. இவைகளைப் பற்றி அறிய, தத்துவம் அவனுக்கு உதவி புரிகிறது. மனிதனிடம் உள்ள வளர்ந்தோங்கும் மன எழுச்சிக்கான சுய விளக்கமே, தன்னொளியே தத்துவமாகும். தத்துவ அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், தத்துவம் முழுதறிந்தவர் என்று கொண்டாடப்படும் ஞானிகள் யாவரும் அதன்குரலில், அதாவது தத்துவத்தின் குரலில் பேசுகின்றனர். மாபெரும் ஆக்கப் பூர்வமான சிந்தனையாளர்கள், தத்துவ வித்தகர்கள், காலந்தோறும் தோன்றுகின்றனர். அவர்கள் மக்களை ஊக்குவிக்கின்றனர்; உயர்த்துகின்றனர்; உயர்வு பெறச் செய்கின்றனர். மனிதனின் உள்ளத்தில் சில தத்துவஞான வினாக்கள் முளைத்தெழுகின்றன. சம்சாரம் என்றால் என்ன? அதன் நோக்கம் அல்லது காரியந்தான் என்ன? உலகம் உண்மையானதா அல்லது வெறுந்தோற்றமா?