பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 படைப்புக் கர்த்தா அல்லது அண்டங்களை ஆட்டிப் படைக்கும் அதிகாரி யாரேனும் உண்டா? அவ்வாறு ஒரு படைப்போன் இருப்பின் அவனது இயல்புதான் என்ன? பதி என்று கூறப்படுகின்ற இறைவனுக்கும், பசு என்று கருதப்படுகின்ற மனிதனுக்கும், (சீவனுக்கும்) இடையே ஏதாவது உறவு உண்டா? பிறப்பு - இறப்புச் சுழற்சியினின்று விடுபட ஏதேனும் வழி உண்டா? மனிதனுக்கு அப்பாற்பட்ட பொருளைக் குறிக்கும் ஏதேனும் முழுமுதற்பொருளாம் பரம்பொருள் உண்டா? அவ்வாறு இருப்பின் அதன் சிறப்பான இயல்புதான் என்ன? இப்பாசக்கட்டு அல்லது உலக வலைக்குள் மனிதன் எவ்வாறு சிக்கிக்கொண்டான்? அவனது சிறப்பியல்பு யாது? அவன் பரம்பொருளின் ஒரு கூறா? அல்லது அவனும் அதுவும் ஒன்றா? மனிதனைக் குறிக்கும் ஆண்டவனுக்கும், அனைத்துப் பொருள்களுக்கும் அப்பாலுக்கப்பாலாய் விளங்கும் எல்லையற்ற பரம்பொருளுக்கும் இடையேயுள்ள வேறுபாடுதான் என்ன? இந்த அண்டத்திற்கான மூலப்பொருள் யாது? பொருள் என்றால் என்ன? மனம் என்பது யாது? தனித்த ஆன்மா என்று ஒன்று உண்டா? வாழ்வின் இறுதி இலட்சியம் என்ன? இவ்வகைப் பிரச்சனைகள் அல்லது சிக்கல்களின் தீர்க்கமான தீர்வுக்கான ஆராய்ச்சிக்குத் தத்துவஞானம் என்று பெயர். இவ்வகை ஞானம் நேர்த்தியான சிறப்பான முறையில் எல்லாவகையான பிரச்சனைகளுக்கும் முடிச்சுகளுக்கும் தீர்வு காண்கின்றது. இந்தியத் தத்துவங்கள் தற்சார்புடையவை. பிற மேலைநாடுகளின் தாக்கமில்லாமல் தனக்கு வேண்டிய, தேவைப்பட்ட தத்துவங்களை இந்தியா தானே உருவாக்கிக் கொண்டுள்ளது. இந்தியத் தத்துவங்கள் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உலகந்தழுவிய நிறைமொழியை, மறைமொழியை உட்கருவாகக் கொண்டு முகிழ்ந்தவை. இத்தத்துவங்கள் வாழ்வின் உறுதிப்பேறுகளில் மையங்கொண்ட நாட்டத்தின், தேடுதலின், வினவுதலின் அடிப்படையில் விரிவடையும் வட்டம் போன்று உருவானவை. வாழ்வியலோடு பின்னிப் பிணைந்துள்ள, இலைமறைகாயாக விளங்கிக்கொண்டிருக்கின்ற தன்ஒளிமிக்க இயற்கை நெறிமுறைகளை அடித்தளமாகக் கொண்டு எழுந்த எழின் மாடங்களாகும்; கூடங்களாகும். எனவே வாழ்க்கை வேறு தத்துவங்கள் வேறு என்று பிரித்தறிய இயலாது. பழமும் பழச்சுவையும் போல உடனாய் விளங்குபவை. எனவே இத்தத்துவங்களில் சகிப்புத் தன்மையைப் போற்றும் பண்பு மேலோங்கியிருப்பதைக் காணலாம்.