பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 விலங்குத்தன்மையினால் விளைந்தவை. "தன்னை வியந்தான் விரைந்து கெடுவான்" என்பது முன்னோர் மறைமொழி. இடைத்தர உயிர்கள் பறித்தல் இன்றி வாழ்கின்றன. பங்கிட்டு வாழும் பண்பு அதிகரித்துக் காணப்படுகிறது. வென்று வாழ்தலை விடப் பன்மடங்கு மேலானது வகுத்து வாழும் பண்பு. இப்படித் தரத்தில் ஓர் உயிர் மற்றோர் உயிருக்குத் துணைபுரிந்து வாழ்கிறது. மானுட சமூக அமைப்பு இதை, இப்பண்பினை. இப்பாங்கினை அடிப்படையாகக் கொண்டது. இப்படி வாழ்வதே சமுதாய வாழ்வாகும். இவ்வாழ்வில் பொதுநலத்திற்குத் தன்னலம் இடம் கொடுத்தாக வேண்டும். தன்னலத்திலிருந்து பொது நலம் பூக்கும் வாய்ப்புடைய வாழ்க்கை. சமுதாயத்தின் சட்ட திட்டங்களை வரையறைகளை மீறுபவர் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. தக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முறையான கட்டமைப்பின் மூலம் நன்மை நிலைநாட்டப்படுகிறது. நாகரிகம் மிகுந்த சமுதாயங்களில் நல்ல ஒழுக்கம் பேணப்படுகிறது. அன்புடனும் ஆதரவுடனும் மக்களின் சமுதாய வாழ்வு இனிதே நடைபெறுகிறது. சமுதாய வாழ்வுதான் மனிதன் மேலும் மேலும் உயர்ந்து செல்ல உதவும் ஏணியாகும். இப்பூவுலக வாழ்வு சுவர்க்க வாழ்வாகப் பரிணமிப்பது சமுதாயத்தில்தான் 'வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' என்பது வள்ளுவர் மறை. தலையாய வாழ்க்கை இதனினும் மேலானது. இதனினும் இனிமையானது. இன்பம் நிறைந்தது. அது வழங்குதலை, பிறருக்குப் படைத்து வாழ்தலை மையமாகக் கொண்டது. ஒரு வகையான வேள்வி. தனக்கென்று தேடாது. தன்னிடத்திருப்பதைப் பிறருக்கென்றே பண்புடன் கொடுத்தும், படைத்தும் வழங்கியும் வாழ்வது. வகையறிந்து அன்பு மேலீட்டால் கொடுப்பதால் கொடுப்பவனுக்கும் கொண்டவனுக்கும் ஒருசேர இன்பம் உண்டாகிறது. கொடுப்பதாலோ கொள்வதாலோ குறை ஒன்றும் வருவதில்லை. இறைக்க, இறைக்கக் கேணி நீர் ஊறுவது போன்று, எடுத்து முறையாக வழங்க வழங்க ஆற்றலும் ஆக்கமும் உயிரின் கண் உயர்கின்றன. தலை சிறந்த இச்செயலுக்கு வேள்வி என்பது பெயர். இது வாழ்க்கையின் மேலான கொள்கையும் கடைப்பிடித்தலும் ஆகும். கல்வியை மற்றவர்களுக்குப் புகட்டுகிற அளவு ஒருவன்தானே கல்விமான் ஆகிறான்.