பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ஞானத்தை வழங்குபவனுக்கு ஞானம் வளர்கிறது. செல்வத்தை அப்படியே பொது நன்மைக்கு வாரி வழங்கும்போது அது மேன்மேலும் வளர்கிறது. பொது நன்மையில் தனி நன்மை எப்போதும் உள்ளிருப்பாக விளங்கும். வாழ்க்கையையே வழங்குதலாகக் கொண்ட ஒரு குடும்பச் சித்திரம் ஒன்று புறப்பாடலில் சொல்லோவியமாக்கப்பட்டுள்ளது. படித்தும் உணர்ந்தும் இன்புறத் தக்கது. பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் குமண வள்ளலிடம் பெரும்பொருளைப் பரிசிலாகப் பெற்று வந்து தன் மனையாளிடம் கூறியது: நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும் பன்மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும் கடும்பின் கடும்பசி தீர யாழ நின் நெடுங்குறி எதிர்ப்பை நல்கியோர்க்கும் இன்னோர்க்கும் என்னாது என்னோடும் சூழாது வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும் எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே பழந்தூங்கு முதிரத்துக் கிழவன் திருந்துவேல் குமணன் நல்கிய வளனே (புறம்.163) "என் மனைக்கு உரியவளே! உன்னை விரும்பும் பெண்டிருக்கும், நீ விரும்பும் பெண்டிருக்கும், உன் உறவினரில் கற்புடைய மூத்த பெண்டிருக்கும், நம் குடும்பத்தில் பசி நீங்க நெடுநாளும் கடன் தந்து உதவியவர்களுக்கும் மற்றும் இன்னார், இனியர் என்று கருதாமலும், என்னிடம் கேட்க வேண்டுமே என்று கவலைப்படாமலும், பல மாதங்களுக்கு வளமாக வாழலாம் என்று நினைக்காமலும் முதிர மலைக்குத் தலைவனான குமணவள்ளல் நல்கிய இப்பெருஞ்செல்வத்தை நீ வழங்குவாயாக" என்பது இதன் பொருள். யாசித்து வாழும் புலவரிடம் காணப்பட்ட நேசித்து வாழும் பாங்கு எண்ணி எண்ணிப் போற்றத் தகுந்ததாகும். வாழ்வதை விட வாழ்வித்தலில் கொண்ட நாட்டம் பின்பற்றத் தக்கது. இந்த உலகம் எந்தக் காரணத்தால் இன்றுவரை வாழ்ந்து வருகிறது? ஈராயிரம் ஆண்டுகட்கு முன் தொடுக்கப்பட்ட வினா. கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி என்ற மன்னன் இவ்வினாவிற்கு விடை தருகிறான்.