பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 மேலோர். மண்ணுலகத்தை மாண்புறுத்தியவர்கள், அவர்கள் அனைவரும் மக்கள் சேவையை மகேசன் சேவையாக உணர்ந்து வினையாற்றியவர்கள். கருமம் புரிந்து வாழ்ந்தவர்கள். நரர்களைப் பேணுவதே நாராயண வழிபாடாகிறது. சீவன்களை உய்விப்பதே சிவபூசையாகிறது. தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்பவர்களே வேள்வி மூர்த்திகளாகின்றனர். அவர்களின் எண்ணிக்கை உயரும் அளவிற்கு உலகம் நலன் காண்கின்றது. வேள்வி என்னும் கருமம் பலப்பல வடிவெடுத்திருக்கிறது. மனிதனது உடல் வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்கு ஒரு வழியைக் காண்பித்தால் அது வேள்வியாகிறது. அதாவது நற்செயலாகிறது. நேர்மையான வழியில் மனிதனை நல்ல உழைப்பாளியாக்கினால் அது வேள்வியாகிறது. நல்வழியில் ஈட்டிய செல்வத்தை நல்லார் எல்லார்க்கும் பயன்படுத்தினால் அச்செயல் வேள்வியாகிறது. உணவு சமைத்துத் தெய்வத்தின் பெயரால் அதனைப் பலரோடு பங்கிட்டுக் கொள்ளும்போது அது வேள்வியாகிறது. கல்வியையும் நல்லறிவையும் ஞானத்தையும் பொதுவுடமையாக்கும்போது அது வேள்வியாகிறது. தெய்வ வழிபாட்டில் மக்களை ஈடுபடுத்தும் நிகழ்ச்சி எதுவும் வேள்வியாகிறது. வாழ்வாங்கு வாழ்தல் வாயிலாக மனிதன் தன்னைத் தெய்வத்துக்கு ஒப்படைப்பானாகில் அவன் புரிகின்ற வேள்வி முற்றுப்பெறுகிறது. விறகு தன்னைத் தீயிடம் கொடுத்து விடுவதால் தானே தீயாகிறது. அங்ஙனம் வாழ்க்கை முழுவதையும் வேள்வியாக்கி, தன்னைத் தெய்வம் நீங்காது நின்று அருள் பொழியும். வழங்கி வாழ்தல் இவ்வாறு தெய்வீகமாகிறது. வேள்வியாகக் கருதிச் செய்யும் கருமங்கள் மனிதனைப் பந்தப்படுத்த மாட்டா. வேள்விச் செயல்களை, யாக கருமங்களை வேண்டிய அளவு விரிக்கலாம். அதனால் எப்போதும் எங்கும் சிறப்பே உண்டாகிறது. உலகில் பிறப்பதும் பிறந்து உயிர்வாழ்வதும் துன்பம் என்று சிலர் கருதுகின்றனர். இன்னும் சிலர் அதை இன்பமாக எண்ணி இறுதியில் ஏமாற்றமடைந்து வருந்தித் துன்பமடைகின்றனர். போட்டி போடுதலையே வாழ்க்கைத் திட்டமாகக் கொண்டவர்கள் ஏமாற்றமடைவது தவிர்க்க முடியாதது. ஒரே ஒரு வழியில்தான் அதற்கு விலக்கு உண்டு. வாழ்க்கையில் அமைந்த செயல்கள் அனைத்தையும் வேள்வியாகச் செய்கிறவர்களுக்குத் துவக்கத்திலும் துன்பமில்லை, இடையிலும் துன்பமில்லை. இறுதியிலும் துன்பமில்லை. 'இன்பமே எந்நாளும் துன்பமில்லை' என்றார் அப்பர் பெருமான். இவர் படைப்பின் உட்கருத்தை அறியும் பேறு பெற்றவர்.