90
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
இந்த ஓவியம் என்னால் வரையப்பட்டது என்பது வழாநிலை. அவ்வாறின்றி, இத்தொடரில் செயப்படுபொருளாகிய ஓவியமே வரைதல் என்னும் செயலைச் செய்ததுபோலப் பேச்சு வழக்கில் வருகிறது. ஆகையால் மரபு வழு, மரபு வழுவமைதியானது.
3.7 தொகுப்புரை
தொடர்கள் எவ்வாறு உருவாகின்றன, அவை அமைவதற்குரிய இன்றியமையாத உறுப்புகள், பலவகைத் தொடர்களும் அவற்றின் பயன்பாடுகளும் குறித்து, இந்தப் பாடத்தில் விரிவாக அறிந்துகொண்டீர்கள். இவற்றை உங்களுடைய எழுத்திலும் பேச்சிலும் பிழையில்லாமல் பயன்படுத்த வேண்டும். நாம் மற்றவரிடம் பேசும்போது, தொடர்களாகத்தாம் பேசுகிறோம். எழுத்துகளாவோ சொற்களாகவோ பேசுவதில்லை. ஆகையால், ஒருவர் பேசும் தொடரைக் கொண்டு, அதன் வகைப்பாட்டை உங்களால் பிரித்தறிய இயலும். ஒரு தொடரை மற்றொரு தொடராக மாற்றவும் நீங்கள் அறிந்து கொண்டீர்கள். ஆகவே, தமிழ் கற்றல் கற்பித்தலில் பிழைநேராமல் காத்துக்கொள்ளலாம். சிறு சிறு உரைப்பகுதிகளையோ கட்டுரைகளையோ நீங்களே உருவாக்கும்போது, தொடர்களின் இன்றியமையாத கூறுகளை நினைவிற்கொண்டு செம்மையாகப் பயன்படுத்துங்கள். பன்முறை பயிற்சி, உங்கள் பேச்சிலும் எழுத்திலும் பிழை ஏற்படுவதைத் தவிர்க்கும்.