உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்






எடுத்துக்காட்டாக,


நீங்கள் உங்கள் தோழியின் நடனத் திறமையைப் பாராட்டி எழுத விரும்புகிறீர்கள் எனில்,

பூங்குழலி நடனத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவள். எல்லா விழாக்களிலும் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடுவாள். தேசிய அளவிலான நடனப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றுள்ளாள்.

என்று உரைப்பகுதியை எழுத வேண்டும். இதில், பூங்குழலியின் நடனம் பற்றிக் கூறுவது தொடக்கம். அடுத்த தொடர் முதல் கருத்துக்கு வலிமை சேர்க்கிறது. இறுதிக் கருத்து செய்தியின் உச்சத்தைக் கூறி முடிக்கிறது.

6.5.4 கருத்தின் ஒழுங்கமைவு

நாம் கூறும் செய்திகள் சரியான ஒழுங்கமைவில் இருத்தல் வேண்டும். பல கருத்துகளைக் கூறும்போது, ஒவ்வொரு கருத்துக்கும் ஒரு பத்தியை அமைத்தல் வேண்டும். முன்னர் கூறிய உதாரணத்தில் ஒரு கருத்தை ஒரு பத்தியில் கூறிவிட்டோம். அதில் தொடர்ந்து இன்னொரு நண்பனைப் பற்றிக் கூறும்போது, அதனை அடுத்த பத்தியில் அமைத்தல் வேண்டும்.

பூங்குழலி நடனத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவள். எல்லா விழாக்களிலும் கலந்து கொண்டு சிறப்பாக நடனம் ஆடுவாள். தேசிய அளவிலான நடனப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றுள்ளாள்.

முரளி விளையாட்டில் ஆர்வம் உள்ளவன். பள்ளியில் நடக்கும் எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும் அவன் பங்கு கொள்வான். பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை அவன் பெற்றுள்ளான்.

இவ்வாறு ஒவ்வொரு கருத்தையும் தனித்தனி உரைப்பகுதிகளாகக் கூறுதல் வேண்டும்.

6.6 தொகுப்புரை

தொடர்கள் உருவாவதற்குச் சொற்கள் தேவை. அச்சொற்களைச் சில இடங்களில் சேர்த்தும் சில இடங்களில் பிரித்தும் படிக்கவேண்டும். இல்லையெனில் பொருட்குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை இப்பாடத்தில் நன்கு புரிந்துகொண்டோம். மேலும், நிறுத்தக்குறிகள் பற்றியும் அவற்றை எங்கெங்குப் பயன்படுத்தவேண்டும் என்பது பற்றியும் அறிந்துகொண்டோம். பிறமொழிக் கலப்பு, கலப்பில்லாத தூய தமிழ்ச்சொற்கள் கொண்ட உரைப்பகுதிகள் உருவாக்குதல், சிறந்த உரைப்பகுதி உருவாக்கும் முறைகள் பற்றியும் பல்வேறு எடுத்துக்காட்டுகள் வாயிலாக அறிந்துகொண்டோம். இவற்றை அறிந்து கொண்டதோடு, நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தவும் வேண்டும். தமிழின் எழுத்து, சொல், தொடர், புணர்ச்சி அமைப்பு முறைகள், மொழிநடைகள் எனப் பலவற்றை அறிந்துகொண்ட நாம், தமிழைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் வேண்டும். இப்பாடப் பகுதியிலும் இதற்கு முந்தைய பாடப்பகுதிகளிலும் இடம்பெற்றுள்ள பயிற்சிகள் வாயிலாகப் பிழை நேரும் இடங்கள், அவற்றைக் களையும் வழிமுறைகள் ஆகியவற்றை மனத்திற்கொண்டு பிழையின்றிப் பேசிப் பழகுவோம். எழுதிப் பழகுவோம்.