உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







5. துணைத்தொடரில் வரும் விளிப்பெயர்கள் நான்காம் வேற்றுமை உருபை ஏற்கும்.

6. துணைத்தொடரில் வரும் பயனிலையுடன் 'ஆக' அல்லது 'ஆறு' என்னும் சொல்லைச் சேர்த்து அதனை முதன்மைத் தொடருடன் இணைக்கவேண்டும்.

7. இருதொடராகத் துணைத்தொடர்கள் இடம்பெற்றிருந்தால் எண்ணும்மை கொடுக்க வேண்டும்.

8. பாடல் அடிகள் மேற்கோளாய்த் துணைத்தொடரில் வரும்போது, அது எழுவாயாக மாறும். மேலும் நேர்கூற்று அயற்கூற்றாக மாறும்போது சில சொற்கள் மாற்றமடையும்.

எடுத்துக்காட்டு

வரியைச் செலுத்தும்படி மக்களுக்குத் துண்டறிக்கை தரப்பட்டது.

மங்கை தோழியிடம், தான் தின்பண்டம் கொண்டு வருவதாகக் கூறினாள். மாநகராட்சி குப்பைகளைத் தரம் பிரித்துத் தருமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டது. பருவத் தேர்வுக்குரிய விவரங்கள் மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. இசை ஆசிரியர் மாணவர்களிடம் நாள்தோறும் பாடிப் பழகும்படி கூறினார். சித்த மருத்துவர்கள் கபசுரக் குடிநீர் குடிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தினர்.

3.6 வழு, வழாநிலை, வழுவமைதி

ஒவ்வொரு நாளும் நம் காதுகளில் சொற்களும் தொடர்களும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. யாரோ ஒருவர் அல்லது நமக்குத் தெரிந்த ஒருவர் நம்மிடையே பேசிக்கொண்டே இருக்கிறார். இப்படித்தான் பேசவேண்டும், இப்படித்தான் எழுதவேண்டும் என்று நாம் ஆராய்வதில்லை. கருத்துத் தெளிவு உள்ளதா, நம்மால் பிறருடைய பேச்சைப் புரிந்துகொள்ள முடிகிறதா என்பதுதான் நமக்குத் தேவையாக இருக்கிறது. ஆயினும், மொழிக்கெனச் சில வரம்புகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன. அவற்றை மீறும்போது, வழுநிலை ஏற்படுகிறது.

வழு என்பதன் பொருள், 'குற்றம்'. என்ன குற்றம்? இங்குச் சொற்குற்றத்தைத்தான் வழு என்கிறோம். எடுத்துக்காட்டாக, யானையின் இளமைப்பெயர் கன்று என்பது. யானைக்கன்று என்று சொல்லாமல், யானைக்குட்டி என்று சொல்வது வழு. நாய்க்கன்று என்று யாராவது சொல்லிக் கேட்டிருக்கிறோமா? இல்லையே. நாய்க்குட்டி என்றுதானே கூறுகிறார்கள்.

நம்முடைய வழக்கில் அடிக்கடி பயன்படுத்தும் சொற்களில் பிழை ஏற்படுவதில்லை. நாய் வீட்டுவிலங்கு. நம் கண்ணில் அடிக்கடி தென்படும் விலங்கு. ஆனால், யானையை எப்போதாவதுதான் நேரிலே காண்கின்றோம். அதனால், அதன் இளமைப்பெயரை மறந்திருக்கக்கூடும். காலப்போக்கில் மறைந்து நாய்க்குட்டி, பூனைக்குட்டி என்பதுபோல, தவறாக யானைக்குட்டி என்று கூறியிருக்கலாம். எவ்வாறாயினும், மொழி மரபை மீறாமல் இருந்தால், மொழி காக்கப்படும்.

இன்றைய நிலையில் ஊடகம் தவறான மரபுச்சொல்லையே பயன்படுத்தி வருகின்றது. ஒரு செய்தித்தாளில், 'தாயைப் பிரிந்து வழி தவறி நின்ற குட்டியானை' என்று தலைப்புச் செய்தி இடம்பெற்றுள்ளது. யானைக்குட்டியே தவறான மரபுச்சொல் என்று கூறும்போது, குட்டியானையை மட்டும் என்னவென்று சொல்வது? இதுவும் தவறான மரபுச்சொல்லே.