தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
87
சில நேரங்களில் மரபு மீறப்பட்டாலும் அது சரியானதாக ஏற்றுக்கொள்ளப்படும் சூழலும் உண்டு. இஃது ஒருவகையிலான உடன்பாடுதான். தாய் தன் மகனை ஆசையுடன் கொஞ்சுகிறாள். எப்படித் தெரியுமா? "வாடி என் கண்ணே!" இங்கு, தன் மகனைப் பெண்பிள்ளையைப் போல் அழைத்து மகிழ்கிறாள். இப்படி வரும் தொடர்களை வழுவமைதி என்கிறோம். இத்தகைய தொடர்கள் பண்டுதொட்டே வழக்கில் உள்ளன. இவற்றைப் பற்றிச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
3.6.1 வழுநிலை
நம் பேச்சிலும் எழுத்திலும் சுட்டிக்காட்டப்படும் பிழைகளை வழுக்கள் என்கிறோம். எடுத்துக்காட்டாக,
கலையரசி பாடம் படித்தது (திணை வழு)
இத்தொடரில், கலையரசி என்னும் உயர்திணைப் பெண்பாற்பெயர், படித்தது என்னும் அஃறிணைக்குரிய ஒன்றன்பால் விகுதியைக் கொண்டு முடிந்தது. இது திணை வழுவாகும்.
கண்ணன் வேலை செய்தாள் (பால் வழு)
இத்தொடரில் கண்ணன் என்னும் ஆண்பால் 'வந்தாள்' என்னும் பெண்பால் வினை கொண்டு முடிந்துள்ளது இது பால் வழுவாகும்.
நாங்கள் வந்தார்கள் ( இட வழு)
இத்தொடரில் 'நாங்கள்' என்பது 'தன்மை' இடப்பெயர். 'வந்தார்கள்' என்னும் 'படர்க்கைப் பலர்பால்' கொண்டு முடிந்துள்ளது. இது இட வழுவாகும்.
அக்கா நாளை வந்தாள் ( கால வழு)
இத்தொடரில் நாளை என்னும் எதிர்காலப் பெயரோடு வந்தான் என இறந்தகால வினைமுற்று வந்துள்ளது. இது கால வழுவாகும்.
முட்டையிட்டது சேவலா? பெட்டையா? (வினா வழு)
இத்தொடரில் முட்டையிட்டது சேவலா? பெட்டையா? என்ற வினா கேட்கப்பட்டுள்ளது. இது பொருந்தாத வினா. இது வினா வழுவாகும்.
நாளை மழை பெய்யுமா? என்ற வினாவிற்கு என் அக்கா நலமில்லை என்று
விடையளிப்பது (விடை வழு)
மயில் கத்தும் (மரபு வழு)
இத்தொடரில் 'மயில் கத்தும்' என்பது மரபு வழு. 'மயில் அகவும்' என்பது பிழையற்ற ஒலி மரபாகும். இது மரபு வழுவாகும்.