உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







மரபு என

இவ்வாறு ஏற்படும் வழுக்கள் திணை, பால், இடம், காலம், வினா, விடை, மரபு வருமிடங்களில் மயங்கிவரும்.

3.6.2 வழாநிலை

திணை, பால் முதலானவற்றில் பிழைகள் ஏதுமின்றி அமையும் தொடர்கள் வழாநிலையைச் சார்ந்தவை. வழாநிலை என்பது, சொற்குற்றம் இல்லாத நிலை ஆகும்.

இளந்தென்றல் வீசியது.

பறவைகள் வானில் வட்டமிட்டன.

மயில் அகவ குயில் கூவியது.

என்பன போன்ற தொடர்களில் எவ்வித வழுவும் இல்லை. இவ்வாறு திணை, பால், இடம், காலம், வினா, விடை, மரபு ஆகியவற்றைக் கொண்டு அமையும் தொடர்கள் பிழையின்றி அமைந்தால் அவை வழாநிலைத் தொடர்களாகும்.

3.6.3 வழுவமைதி

திணை முதலாகக் கூறப்பட்டவற்றுள் ஒன்று வேறொன்றாக மயங்கி வந்தாலும், சான்றோரால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாயின், அவை வழுவமைதி ஆகும். வழுவமைதி என்பது, வழுவாயினும் ஏதேனும் ஒரு காரணத்தால் உடன்பட்டுப் பொருத்தமாகக் கொள்ளுதல் ஆகும். ஒருவன், தன் பசுமாட்டைப் பார்த்து "என் லட்சுமி மூன்று லிட்டர் பால் தருவாள்" என்று கூறுவது, அஃறிணையை உயர்திணையாய்க் கருதிக் கூறுதலாகும். இவ்வாறு கூறினாலும், உயர்வு கருதி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதுபோன்று ஏழு வகையில் வழுவமைதியைக் காணலாம்.

திணை வழுவமைதி

அஃறிணையை உயர்திணையாகக் கூறுவதும் உயர்திணையை அஃறிணையாகக் கூறுவதும் திணை வழுவமைதி ஆகும். மகிழ்ச்சி, உயர்வு, மிகுதி, சிறப்பு, சினம், இழிவு முதலிய காரணங்களால் திணை வழுவமைதி ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

உயர்வு

இழிவு

நத்தையாரே நத்தையாரே எங்கே போறீங்க? (அஃறிணை, உயர்திணை ஆயிற்று)

மூடனோடு நாயும் வந்தது. (உயர்திணை, அஃறிணை ஆயிற்று)

பால் வழுவமைதி

ஆண்பாலைப் பெண்பாலாகவும் பெண்பாலை ஆண்பாலாகவும் கூறுவது பால் வழுவமைதி. மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, சினம், இழிவு முதலிய காரணங்களால் பால் வழுவமைதி ஏற்றுக்கொள்ளப்படுகிறது.