பக்கம்:தமிழ்க் காதல்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

121


தலைவனுக்கு ஒப்பிட்டுக் காட்டுகின்றாள். இப்பாடலாசிரியர் மிளைக் கந்தனார் காதற்றொடக்கத்தின் கவர்ச்சியையும் பொலி வையும் காலப்போக்கில் அதன் தணிவையும் ஏமாற்றத்தையும் நேர்மாறுபடப் புலப்படுத்தும் உளவியல்பு அறிவியலுக்கும் நடையியலுக்கும் பொருந்துவதாகும். “ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது வானோர் அமுதம் புரையுமால் எமக்கென” (1091) என்று தொல்காப்பியர் வேட்கையின் மனவிம்மலை வெளிப்படுத்துவர். காதலார்வம் தவறன்று தகுவது எனினும், ஆர்வமிகுதியில் சோர்வு தோன்றும் ஏற்றத்திற்கேற்ப இறக்கம் உண்டு. மணந்த தொடக்கத்துக் கோவலன் கண்ணகியைப் புகழும் ஆர்வ வுரைகள் அகராதியில் இல்லை. மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே. கரும்பே, தேனே, மருந்தே, மணியே, அமிழ்தே, இசையே என்று உலவாக் கட்டுரை பல பாராட்டுகின்றான். இவ்வார்வப் புனைவின் விளைவென்ன? சில ஆண்டிற்குள் கண்ணகியை மறந்தான்; பல ஆண்டு மாதவிபால் மயங்கிக்கிடந்தான். ஆர்வச் சொற்களால் கோவலன்மாதவியைப் புகழவில்லை என்பதை நினைக. * VII கரணம் (சடங்கு முறை) கற்பு என்றால் கொண்ட கொழுநன்பால் அன்புத் திண்மை என்பது பொருளென எல்லாரும் பொதுவாக அறிவோம். இப்பொருள் பொருளே. அகத்திணைக்கண் வரும் களவு கற்பு என்பனவோ இலக்கணக் குறியீடுகள். இவை பொதுவாக நாம் அறியும் பொருளோடு இன்னும் விரிந்த பொருளையுடையன. மனமும் மனப்பின் நிகழும் காதற் செய்கைகளும் எல்லாம் கற்பெனப்படும் (தொல், 1444). "பன்மாண் கற்பின் நின்கிளை முதலோர்" என்னும் புறநானூற்றுத் தொடரில் கற்பென்னும் சொல்லின் பொருட்பரப்பை அறியலாம். பெண்ணிற்கு இன்றியமையாத ஒழுக்கம் என்று போற்றுகின்றோமே கற்பு என்னும் திண்மை, அத்திண்மை திருமணத்தால் தோன்றுவதில்லை, திருமணத்திற்குப் பின் வளர்வுறுவதில்லை, திருமணமாயிற்று என்பதற்காகத் தேய்வதில்லை. களவிலும் கற்புண்டு, களவிற்கு முன்னும் கற்பு உண்டு, கற்பொடு பிறக்கின்றாள் பெண் களவிற்குமுன் பெண்ணுள்ளம் ஒருவனை நினையவில்லையாதலின், கற்பு வெளிப்பட ஏதுவில்லை, களவில் ஒருவனை நாடும்போதே கற்பொடு நாடுகின்றாள். கற்புத்திண்மை அவளுக்கின்றேல், தலைவன் வருவழி ஏதத்திற்கு ஏன் கவல்கின்றாள்? ஏன் வெறியாட்டை விலக்க முற்படுகின்றாள்? ஏன் அறத்தொடு நிற்கின்றாள்? எல்லாம் பலியாத போது, பிறந்த இல்லத்தையும், பெற்றோரையும், அறிந்த சூழ்நிலையையும் ஒரு நொடியில் வெறுத்து, உடன்போகத் துணிவது ஏன்? இவ்வெல்லாம் இன்பத்தின் பொருட்டா? இல்லை, இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/135&oldid=1238439" இலிருந்து மீள்விக்கப்பட்டது